பள்ளிக்கு வராத மாணவர்களை மீண்டும் வரவழைக்க உத்தரவு
பள்ளிக்கு வராத மாணவர்களை மீண்டும் வரவழைக்க உத்தரவு
UPDATED : பிப் 15, 2025 12:00 AM
ADDED : பிப் 15, 2025 10:26 AM
காக்களூர்:
நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்களை அழைத்து கல்வி கற்பிக்க வேண்டும் என தலைமை ஆசிரியருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
திருவள்ளுர் அடுத்த, காக்களூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், கலெக்டர் பிரதாப் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவர்கள், ஆசிரியர்களின் வருகை பதிவு, மாணவர்களின் தேர்ச்சி விகிதம், கற்றல் திறன் மற்றும் எழுத்து திறன் குறித்து கேட்டறிந்தார். பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில வழி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் எடுப்பதை வகுப்பறைகளில் அமர்ந்து பார்வையிட்டார்.
பணி செயலி பதிவேற்றம் செய்வது குறித்தும், நீண்ட நாள் வருகை புரியாத மாணவர்கள் குறித்தும், ஆய்வு செய்த அவர், நீண்ட நாள் வருகை புரியாத மாணவர்களை பள்ளி அழைத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
மேலும், வகுப்பறைகளில், ஆசிரியர்கள் பாடம் எடுப்பதை ஆய்வு மேற்கொள்ள வேண்டும்; வரும் அரசு பொது தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டார்.
பள்ளி தலைமை ஆசிரியர் ஜெகதீஸ்வரன் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.