புறநோயாளிகளுக்கான சிகிச்சை அரசு டாக்டர்கள் இன்று புறக்கணிப்பு
புறநோயாளிகளுக்கான சிகிச்சை அரசு டாக்டர்கள் இன்று புறக்கணிப்பு
UPDATED : ஆக 17, 2024 12:00 AM
ADDED : ஆக 17, 2024 10:46 AM
சென்னை:
அரசு டாக்டர்கள் தமிழகம் முழுதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், இன்று புறநோயாளிகள் பிரிவு சிகிச்சையை, ஒரு மணி நேரம் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
மேற்கு வங்கம் மாநிலம் கோல்கட்டா அரசு மருத்துவ கல்லுாரியில், முதுநிலை பயிற்சி பெண் டாக்டர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தை கண்டித்து, சென்னையில் நேற்று ஜனநாயக அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதேபோல, அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக் குழு தலைவர் பெருமாள் பிள்ளை தலைமையில், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் போராட்டம் நடத்தப்பட்டது. அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு சங்க செயலர் ராமலிங்கம் தலைமையில், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பல டாக்டர்கள் கருப்பு, பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை பதிவு செய்தனர். இதேபோல் தமிழகம் முழுதும் டாக்டர்கள் பல போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கம், நாடு தழுவிய முழு வேலைநிறுத்த போராட்டத்திற்கு, இன்று அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சங்கத்தின் தலைவர் செந்தில், செயலர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பில், தனியார் மருத்துவமனை, கிளினிக்களில் பணியாற்றும் அரசு டாக்டர்களின் சேவை இன்று நிறுத்தப்படும்.
அரசு மருத்துவமனைகளில் இன்று காலை, 7:30 முதல், 8:30 மணி வரை புறநோயாளிகள் பிரிவு புறக்கணிக்கப்பட்டு, போராட்டம் நடத்தப்படும் என, தெரிவித்துள்ளனர்.