ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளை சீரமைக்க பழனிசாமி வலியுறுத்தல்
ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளை சீரமைக்க பழனிசாமி வலியுறுத்தல்
UPDATED : செப் 10, 2024 12:00 AM
ADDED : செப் 10, 2024 03:06 PM
சென்னை:
தமிழகம் முழுதும் உடனே சிறப்பு குழு அமைத்து, ஆதிதிராவிட மாணவ - மாணவியரின் விடுதிகளை போர்க்கால அடிப்படையில், சீரமைக்க வேண்டும் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகம் முழுதும் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் உள்ள, 1,331 மாணவ - மாணவியர் விடுதிகளில், 99,000 மாணவ - மாணவியர் தங்கியுள்ளனர். இவர்களுக்கு விதிமுறைப்படி உணவுப்படி வழங்கப்படுகிறது.
பண்டிகை காலங்களில், சிறப்பு உணவு வழங்க சிறப்பு நிதியும், தினசரி பயன்படுத்தும் பொருட்கள் வாங்க, மாதம் ஒருமுறை பள்ளி மாணவர்களுக்கு, 100 ரூபாயும், கல்லுாரி மாணவருக்கு, 150 ரூபாயும் வழங்கப்படுகிறது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில், பல கல்லுாரி மாணவர்கள் தங்கியுள்ளனர். அங்குள்ள கழிப்பறைகள் சுகாதாரமின்றி, கதவுகள் உடைந்துள்ளன. இரவு நேரங்களில், வளாகத்தில் வெளியாட்கள் மதுபானங்கள் அருந்துகின்றனர்.
அசைவ உணவு வழங்கும்போது, மூன்றில் ஒரு பங்கு மாணவர்களே சாப்பிடக்கூடிய அளவில் உணவு வழங்கப்படுகிறது.
பல மாணவர்கள் சாப்பாடு இல்லாமல் பசியோடு இருக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. தண்ணீர் தொட்டி சுத்தம் செய்து பல ஆண்டுகள் ஆகியுள்ளன. இதுகுறித்து, பலமுறை நிர்வாகத்திடம் புகார்கள் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகம் முழுதும் உடனே சிறப்புக் குழு அமைத்து, ஆதிதிராவிட மாணவ - மாணவியரின் விடுதிகளை போர்க்கால அடிப்படையில் உணவு, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை சீர்செய்ய வேண்டும்.
இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.