தனியார் பள்ளி பஸ்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த பெற்றோர் எதிர்பார்ப்பு
தனியார் பள்ளி பஸ்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த பெற்றோர் எதிர்பார்ப்பு
UPDATED : மே 29, 2024 12:00 AM
ADDED : மே 29, 2024 08:06 AM

திருப்பூர்:
வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய ஆய்வில், 100க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு குறைவாக இருப்பதாக வெளியான தகவல் பெற்றோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள், மாணவ, மாணவியர் வசதிக்காக, பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்கள் இயக்குகின்றன. மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய, வட்டார போக்குவரத்து அதிகாரிகள், ஒவ்வொரு ஆண்டும், பள்ளி வாகனங்களை முழுமையாக பரிசோதிக்கின்றனர். அதற்கேற்ப, பள்ளி வாகனங்களால் விபத்துகளும் நிகழ்வதில்லை.
தரை தளம், சீட்டில் ஓட்டை, வலுவிழந்த படிக்கட்டு, முதலுதவி பெட்டிகள் இல்லாதது, பயன்படுத்த முடியாத நிலையில் அவசர கால வழி, தீ தடுப்பு கருவிகள் இல்லாதது, உடைந்த நிலையில் நுழைவாயில் பீடிங், கைப்பிடி கம்பிகள் இல்லாதது, அதிக உயரத்தில் படிக்கட்டு, பாதுகாப்பற்ற வகையில் பேட்டரி உள்ளிட்ட குறைபாடுகள் உள்ள, 100க்கும் மேற்பட்ட வாகனங்களின் அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டது.
இது பெற்றோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது; எல்.கே.ஜி., படிக்கும் குழந்தை முதல், பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர் வரை பள்ளி பேருந்தில் பயணிக்கும் நிலையில் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
அதி வேகம் வேண்டாமே!
பள்ளி பேருந்துகள் குறிப்பிட்ட வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவிநாசியில் உள்ள குறிப்பிட்ட சில தனியார் பள்ளிகளின் வாகனங்கள், மிக அதிக வேகத்தில் பயணிக்கின்றன. அவிநாசி - சேவூர் சாலையில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்காணித்தால், அதை அறிந்துக் கொள்ள முடியும். பள்ளி பேருந்துகள், வேக கட்டுப்பாடுடன் இயங்குவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்பதும் பெற்றோர் எதிர்பார்ப்பு.