தேர்வு எழுதிய மாற்றுத்திறன் மாணவி- தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து பெற்றோர் மகிழ்ச்சி
தேர்வு எழுதிய மாற்றுத்திறன் மாணவி- தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து பெற்றோர் மகிழ்ச்சி
UPDATED : மே 21, 2025 12:00 AM
ADDED : மே 21, 2025 08:53 AM
பந்தலுார் :
ஆம்புலன்சில் வந்து தேர்வு எழுதி மாற்றுத்திறன் மாணவி தேர்ச்சி பெற்றதால் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.
பந்தலுார் அருகே பாட்டவயல் கரும்பன்மூலா கிராமத்தை சேர்ந்தவர் சைனுதீன்-சீனத் தம்பதி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இருவரும் எலும்பு சிதைவு நோயால், பாதிக்கப்பட்டு எழுந்து நடமாட முடியாத நிலையில், படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை உள்ளது.
குழந்தைகளின் அனைத்து தேவைகளையும் தாய் மற்றும் தந்தை இணைந்து மேற்கொண்டு வரும் நிலையில், மூத்த மகள் பாத்திமத்து சுகைலா பிளஸ்- 2 முடித்துவிட்டு தற்போது வீட்டில் கலை பொருட்களை உருவாக்கி வருகிறார். இவர்களின் இரண்டாவது மகள் ஷப்னா ஜாஸ்மின்,17.
இவர் பிதர்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில், 11ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மார்ச், 4ம் தேதி தேர்வு துவங்கிய நிலையில் தேர்வு நாள் அன்று, ஆம்புலன்சில் அழைத்து வந்து, ஸ்ட்ரெக்சரில் படுக்க வைத்து உதவியாளரை வைத்து தேர்வு எழுதினார்.
நேற்று மதியம் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்,58, பொருளியல், 56, வணிகவியல், 52, கணக்குப்பதிவியல்,48, கம்யூ., அப்ளிகேஷன்,66, என, மொத்தம்,280 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.
இதனால், மாணவிக்கு மட்டுமின்றி பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தனக்கு உதவியாக இருந்து, தேர்வு எழுத அழைத்து சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர், நண்பர்கள், தனது தாய் தந்தை, உதவியாளர், ஆசிரியர்கள் அனைவருக்கும் மாணவி ஷப்னா ஜாஸ்மின் நன்றி தெரிவித்துள்ளார்.