தனியார் பள்ளியை அரசு நடத்த பெற்றோர், கிராமத்தினர் முற்றுகை
தனியார் பள்ளியை அரசு நடத்த பெற்றோர், கிராமத்தினர் முற்றுகை
UPDATED : ஆக 07, 2024 12:00 AM
ADDED : ஆக 07, 2024 08:12 AM
தேவகோட்டை:
தேவகோட்டை அருகே செய்யானேந்தல் கிராமத்தில் 1970 ல் இப்பகுதியை சேர்ந்த குழந்தைகள் படிக்க தனி நபர் ஒருவர் கட்டடம் கட்டி பள்ளியை துவக்கினார்.அவருக்கு பின் பள்ளியை நடத்த முடியாத நிலையில் அருகில் உள்ள கிறிஸ்தவ நிறுவன தனியார் பள்ளியே இப்பள்ளியையும் ஏற்று நடத்தினர். அவர்கள் நடத்துவதில் பிரச்னை ஏற்பட்டது.
ஆசிரியர்கள் கோரிக்கையை தொடர்ந்து உதவி பெறும் பள்ளியான இப்பள்ளி ஆசிரியர்களுக்கு 2013ம் ஆண்டு முதல் கல்வித்துறையே நேரடியாக சம்பளம் வழங்கி வருகிறது. இந்நிலையில் பள்ளியில் கழிப்பறை, குடிநீர் பிரச்னை ஏற்பட்டது. கிராம மக்கள் இப்பள்ளியை ஏற்று நடத்தும் கிறிஸ்தவ பள்ளி நிர்வாகத்தினர் அடிப்படை வசதிகளை சரி செய்ய தர கோரிக்கை விடுத்தனர். அந்த நிர்வாகத்தினரிடம் இப்பள்ளியை பற்றி தகவல் இல்லாததால் தற்போது அப்பள்ளி நிர்வாகத்தினர் மறுத்தனர்.
அடிப்படை அத்தியாவசிய பணிகளை செய்த தர வேண்டும் அரசே இப்பள்ளியை ஏற்று நடத்தக் கோரி நேற்று காலை தங்கள் குழந்தைகளுடன் பெற்றோர்கள், கிராமத்தினர் முற்றுகையிட்டனர். போலீசார் பேசியும் முடிவு ஏற்படவில்லை. வட்டார தொடக்கக் கல்வி அலுவலர் சூர்யா நிர்வாகத்தினர், ஊராட்சி தலைவர், பெற்றோர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தினார்.
பேச்சு வார்த்தைக்குப்பின் கல்வி அலுவலர் சூர்யா கூறியதாவது:
உயர் அதிகாரிகளுக்கு தகவலை தெரிவித்து விட்டோம். கிறிஸ்தவ பள்ளியிலுள்ள தற்போதைய நிர்வாகிகளுக்கு அந்த பள்ளி குறித்த விவரம் தெரியவில்லை. இரண்டு மாதத்திற்குள் அவர்கள் மேலிடத்தில் பேசி நடத்த முடியுமா , இயலாதா என முடிவு தெரிவிக்க கூறி உள்ளோம்.
தற்போது 31 குழந்தைகள் படிக்கின்றனர். கூடுதல் ஆசிரியராக நிரந்தரமாக ஒரு ஆசிரியரை மாற்று பணி மூலம் நியமிக்க உள்ளோம். சம்பளம் , ஆசிரியர் நியமனம் எங்களால் செய்ய முடியும். அரசே எடுத்து நடத்தும் நிலை ஏற்பட்டால் மற்ற அடிப்படை வசதிகளை சீர் செய்யப்படும்.
இவ்வாறு கூறினார்.