UPDATED : ஜன 15, 2025 12:00 AM
ADDED : ஜன 15, 2025 11:02 AM

கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நடந்த பட்டி பொங்கல் விழாவில், விவசாயம் செழிக்கவும், நீர்வளம் பெருகவும், பசுமாடு பட்டி மிதிக்கும் நிகழ்வு, நேற்று நடந்தது.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில், ஆண்டுதோறும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படும். நேற்று நடந்த பொங்கல் விழாவுக்கு, பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி தலைமை வகித்தார்.
முன்னதாக, காலை 6:00 மணிக்கு, பல்கலை துணைவேந்தரை, மத்திய பண்ணை வளாக தொழிலாளர்கள் சாரட் வண்டியில் அழைத்து வந்தனர்.
பின், பண்ணை வளாகத்தில் பெண்கள், துணைவேந்தர் கீதாலட்சுமி, பல்கலைக்கழக பயிர் மேலாண்மை இயக்குனர் கலாராணி ஆகியோர் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
பின்னர் பசு மாட்டிற்கு வழிபாடு செய்து, பட்டியில் வலம் வரச் செய்து, பட்டி மிதிக்க வைத்தனர். பசு மாடு முதலில் தண்ணீரிலும், அதைத் தொடர்ந்து நவதானியங்களிலும் கால் வைத்தது.
பல்கலை வளாகத்தில் மாணவர்கள், பங்கேற்ற வள்ளி கும்மியாட்டம், ஒயிலாட்டம் நடந்தது. தொடர்ந்து, பண்ணை தொழிலாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.