பயிற்சி மையத்திற்கு ரூ.20 லட்சம் புத்தகங்கள்: அமைச்சர் சக்கரபாணி
பயிற்சி மையத்திற்கு ரூ.20 லட்சம் புத்தகங்கள்: அமைச்சர் சக்கரபாணி
UPDATED : ஜன 15, 2025 12:00 AM
ADDED : ஜன 15, 2025 11:00 AM

ஒட்டன்சத்திரம்:
பயிற்சி மையத்திற்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசினார்.
காளாஞ்சிபட்டி கலைஞர் நுாற்றாண்டு இலவச போட்டி தேர்வு பயிற்சி மையத்திற்கு கம்பம் ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை,பி.எல்.பி , எஸ்டேட் நிறுவனம் சார்பில் ரூ. 7 லட்சம் மதிப்பிலான போட்டித் தேர்வுக்கான புத்தகங்களை வழங்கிய அவர் பேசியதாவது: போட்டி தேர்வு பயிற்சி மையத்திற்கு இது வரை ரூ.20 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது.
3 ஆயிரம் நுால்கள் உள்ளன. டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வில் 2 பேர், குரூப் 2 தேர்வில் 18 பேர், குரூப் 4 தேர்வில் 7 பேர் இந்த பயிற்சி மையத்தில் படித்து வெற்றி பெற்றனர். மதுரை காமராஜர் பல்கலையில் இயங்கி வந்த யூனியன் பப்ளிக் சர்வீஸ் மையத் தேர்வுகளுக்கான கோச்சிங் சென்டர் இங்கு மாற்றப்பட்டுள்ளது என்றார். அறக்கட்டளை நிறுவனர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.
சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை துணை கலெக்டர் சிவக்குமார், தாசில்தார் பழனிசாமி, டி.எஸ்.பி., கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், பாலு, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் செல்வராஜ், முருகானந்தம் பங்கேற்றனர்.