4 சதவீத ஒதுக்கீடு கேட்டு மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதம்
4 சதவீத ஒதுக்கீடு கேட்டு மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதம்
UPDATED : செப் 24, 2024 12:00 AM
ADDED : செப் 24, 2024 12:36 PM

சென்னை:
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து வகை மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பினர், நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரக வளாகத்தில், நுாற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களில் சிலர், மாலையில் மயக்கமடைந்தனர். அங்கு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்சில், அவர்களுக்கு ஊழியர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
தமிழகத்தில், மாற்றுத்திறனாளி என்ற சொல்லை உருவாக்கி, பல்வேறு சீர்திருத்தங்களை அறிவித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவர், 151 என்ற அரசாணையை உருவாக்கினார். அதில், அரசு துறைகளில் ஒப்பந்த ஊழியராக இரண்டாண்டுகள் பணியாற்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2008ல் உருவாக்கப்பட்ட இந்த அரசாணையை, தற்போதைய தி.மு.க., அரசு அமல்படுத்த வேண்டும். இதுகுறித்து, மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனரிடம் இந்தாண்டில் மட்டும் பலமுறை பேசி இருக்கிறோம். நடவடிக்கை இல்லை.
அதேபோல, அரசு பணியிடங்களில் 4 சதவீதத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறும் வரை, நாங்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்.