UPDATED : செப் 24, 2024 12:00 AM
ADDED : செப் 24, 2024 12:37 PM

சென்னை:
மாணவர்கள், ஆய்வு மனப்பான்மையுடன் படிக்க வேண்டும், என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசினார்.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் சார்பில், அறிவியல் அறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா அண்ணா பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது.
பல்கலை துணைவேந்தர்
அதில், 2018 முதல் 2021 வரையிலான நான்காண்டுகளில் தேர்வான அறிவியல் அறிஞர்களுக்கு, அமைச்சர் பொன்முடி விருதுகளை வழங்கினார்.
இதில், தமிழ்நாடு கால்நடை பல்கலை பதிவாளர் தென்சிங் ஞானராஜ், கல்லுாரி கல்வி இணை இயக்குனர் ராவணன், மத்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக விஞ்ஞானி கதிர்வேலு, மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி தணிகைவேலன், அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி உள்ளிட்ட 43 அறிஞர்கள் விருதுகளை பெற்றனர்.
பின், அமைச்சர் பொன்முடி பேசியதாவது:
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தில், செயலர் நியமிக்கப்படாததால், மன்றத்தின் சார்பில், அறிவியல் அறிஞர்களுக்கு வழங்கப்பட வேண்டிய விருதுகள் 2018 முதல் வழங்கப்படவில்லை.
தற்போது, செயலர் நியமிக்கப்பட்டதும் நான்கு ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்றாண்டுகளுக்கான விருதாளர்களை தேர்வு செய்து, விரைவில் விருதுகள் வழங்கப்படும்.
அறிவியல், ஆய்வு என்ற வார்த்தைகள், அறிவியல் துறையை சேர்ந்தோருக்கு மட்டும் உரியவை அல்ல; அனைத்து படிப்புகளுக்கும் உரியவை தான். தமிழ் உள்ளிட்ட அனைத்து கலை பாடங்களையும், மாணவர்கள் ஆராய்ந்து அறியும் மனப்பான்மையுடன் படிக்க வேண்டும்.
உயர் கல்வி துறை செயலர் பிரதீப் யாதவ், அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர் வின்சென்ட், கமிஷனர் ஆபிரகாம், அண்ணா பல்கலை பதிவாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பட்டமளிப்பு விழா
பின், அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி:
சென்னை பல்கலைக்கு, துணை வேந்தர் நியமிக்கப்படாததால், கடந்த மூன்றாண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை. தற்போது, கன்வீனர் கமிட்டி அமைப்பதற்கு, சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக உயர்கல்வித் துறை செயலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பல்கலையில் இன்று பட்டமளிப்பு விழா நடக்கிறது. பட்டப்படிப்பு சான்றிதழில், துணை வேந்தருக்கு பதில், கன்வீனர் கையெழுத்திடுவார்.