திருவொற்றியூர் அரசு கல்லுாரிக்கு நிரந்தர கட்டடம் தயார்; கூடுதல் பாடப்பிரிவுகள் இணைக்க வலியுறுத்தல்
திருவொற்றியூர் அரசு கல்லுாரிக்கு நிரந்தர கட்டடம் தயார்; கூடுதல் பாடப்பிரிவுகள் இணைக்க வலியுறுத்தல்
UPDATED : ஜன 20, 2026 12:36 PM
ADDED : ஜன 20, 2026 12:41 PM

திருவொற்றியூர் அரசு கல்லுாரிக்கு, 14 ஆண்டுகளுக்கு பின் நிரந்தர கட்டடம் கட்டப்பட்டு, திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில், அறிவியல் உள்ளிட்ட கூடுதல் பாடப்பிரிவுகள் இணைத்து, கல்லுாரியை தரம் உயர்த்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருவொற்றியூரில், 2012ம் ஆண்டு, சென்னை பல்கலை உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கப்பட்டது. தற்காலிகமாக, தேரடி, பூந்தோட்டப் பள்ளி வளாகத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், வகுப்புகள் நடந்த அறைகளில் கல்லுாரி வகுப்புகள் துவங்கின.
இடம் தேர்வு செய்வதில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பலமுறை நிரந்தர கட்டடம் கட்டும் பணி துவங்கியும், அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
கடந்த 2015ம் ஆண்டு முதல், ஒன்பது பேட்ச் மாணவ, மாணவியர், எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத கல்லுாரியின் தற்காலிக கட்டடத்திலேயே படித்து, பட்டம் பெற்று வெளியேறி விட்டனர்.
இதையடுத்து மார்ச், 2024ல், எம்.பி., தேர்தலுக்கு முன்பாக, திருவொற்றியூர், ஜெய்கோபால் கரோடியா அரசினர் மேல்நிலைப் பள்ளி அருகேயுள்ள, ரீட் கூட்டுறவுக்கு சொந்தமான, 2 ஏக்கர் நிலத்தில், 16 கோடி ரூபாய் செலவில், அரசு கல்லுாரிக்கு புதிய கட்டடம் கட்ட, தி.மு.க., எம்.எல்.ஏ., கே.பி.சங்கர் அடிக்கல் நாட்டி, பணிகள் துவங்கினார்.
அதன் படி, தரை மற்றும் இரண்டு தளங்களுடன், 18 வகுப்பறைகள், ஆசிரியர் அறைகள், ஆய்வகம், நுாலகம் உள்ளிட்ட வசதிகள் இடம் பெறுகின்றன. விரைவில் புதிய கட்டடம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. தற்போதுள்ள, ஐந்து கலை பாடப்பிரிவுகளின், மூன்றாண்டு மாணவர்களுக்கே வகுப்புகள் நடத்த போதுமானதாக இருக்கும்.
இதனால், திருவொற்றியூரில் கல்லுாரிக்கு நிரந்தர கட்டடம் கிடைத்தும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு மத்திய சென்னையை நோக்கி மாணவ, மாணவியர், படையெடுக்கும் அவலம் தொடரும்.
எனவே, அரசு பரிசீலித்து கூடுதல் வகுப்பறைகள் கட்டி, அறிவியல் உள்ளிட்ட கூடுதல் பாடப் பிரிவுகள் இணைத்து, கல்லுாரியை தரம் உயர்த்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பணி நிரந்தரம் கோரிக்கை?
கல்லுாரியில், 20க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், 25,000 ரூபாய் தொகுப்பூதியத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர். முதல்வர், அலுவலகத்தில் நிரந்தர பணியாளர்கள் நியமனமாகி விட்ட நிலையில், இங்கு, 14 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தின் கீழ் பணியாற்றி வரும் பேராசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படவில்லை.
எனவே, விதிகளின்படி, சிறப்பாக பணியாற்றி வரும் பேராசிரியர்கள் நிரந்தரம் செய்யப்பட வேண்டும். இல்லாவிடில், தொகுப்பூதியமாவது மற்ற மாநிலங்களை போல் உயர்த்தி வழங்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

