பி.எப்., அலுவலக உதவியாளர் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி
பி.எப்., அலுவலக உதவியாளர் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி
UPDATED : ஏப் 17, 2024 12:00 AM
ADDED : ஏப் 17, 2024 11:02 AM
கோவை:
என் அப்பா பஸ் கண்டக்டர், அம்மா பீடி சுற்றும் தொழிலாளி எங்கள் குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடுபடித்தேன் என்கிறார் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றுள்ள இன்பா.
2023ம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு கடந்த செப்., மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. கோவை மண்டல பி.எப்., அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் இன்பா என்ற பெண், 851 வது ரேங்க் எடுத்து ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
அவரிடம் பேசியபோது:
எனது சொந்த ஊர் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லுார். 10 வகுப்பு வரை அங்குள்ள அரசு பள்ளியில்தான் படித்தேன். பிளஸ்1 பிளஸ் 2 படிப்பதற்காக செங்கோட்டைக்கு வந்து விட்டோம்.
கோவையில் உள்ள சி.ஐ.டி., தொழில்நுட்ப கல்லுாரியில்தான் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்தேன். படிப்பு முடிந்தவுடன் ஐ.ஏ.எஸ்., தேர்வுக்காக சென்னையில் உள்ள சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியில் சேர்ந்து ஓர் ஆண்டு படித்தேன்.
முதன்மை தேர்வு இரண்டு முறை எழுதியும் என்னால் வெற்றி பெறமுடியவில்லை. மூன்றாவது முறை எழுதி வெற்றி பெற்று, சென்னையில் உள்ள தமிழக அரசு சிவில் சர்வீஸ் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து அங்கு தங்கி ஐ.ஏ.எஸ்., பிரதானதேர்வுக்கு படித்தேன்.
இப்போது,851 ரேங்க் எடுத்து வெற்றி பெற்று இருக்கிறேன். என் அப்பா பஸ் கண்டக்டர், அம்மா பீடி சுற்றும் தொழிலாளி. எங்கள் குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு படித்தேன். என் கடின உழைப்புக்கு கிடைத்ததுதான் இந்த வெற்றி. இந்த ரேங்குக்கு ஐ.ஏ.எஸ்., கிடைக்குமா என, தெரியவில்லை.
ஐ.ஏ.எஸ்., தேர்வை பொறுத்தவரை புத்தகங்களை படித்தால் மட்டும் போதாது. மாதிரி வினாத்தாள்களை அதிகம் பயிற்சி செய்ய வேண்டும் என்கிறார் இந்த வெற்றிப் பெண்மணி.