உயிரே போனாலும் நீட் தேர்வு ரத்து கிடையாது! அண்ணாமலை திட்டவட்டம்
உயிரே போனாலும் நீட் தேர்வு ரத்து கிடையாது! அண்ணாமலை திட்டவட்டம்
UPDATED : ஏப் 17, 2024 12:00 AM
ADDED : ஏப் 17, 2024 11:05 AM

பல்லடம்:
உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என பெண் ஒருவருக்கு அண்ணாமலை பதிலளித்தார்.
கோவை தொகுதி, சுல்தான்பேட்டை ஒன்றிய பகுதியில், அண்ணாமலை நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். சின்ன வதம்பச்சேரி கிராமத்தில் அவர் பேசிக்கொண்டிருக்க, பெண் ஒருவர், குடிநீர் இணைப்பு இலவசம் என்று கூறுகிறீர்கள். ஆனால், 3,000 ரூபாய் கேட்கின்றனர்.
நீட் தேர்வு மூலம் ஏராளமான குழந்தைகள் இறக்கின்றனர். இப்படியிருக்க, ஏன் அதனை கட்டாயப்படுத்துகிறீர்கள்... அரிசி பருப்புக்கு ஜி.எஸ்.டி., எதற்கு; நதிநீர் இணைப்பு திட்டம் அறிவித்ததோடு சரி; ஏன் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை' என்றார்.
அதற்கு பதிலளித்து அண்ணாமலை பேசியதாவது:
மக்கள் பிரதிநிதிகள் மக்கள் குறைகளை கேட்க வேண்டும். ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் யாரும், தொகுதி பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை. எனவே, நான் வெற்றி பெற்றதும் நீங்கள் எப்போதும் என்னை அணுகும் வகையில், என்னுடைய நடத்தை இருக்கும்.
இந்த தொகுதியின் தரம் அடுத்த கட்டம் உயரும். இந்த கேள்விகளை எல்லாம் கடந்த, 70 ஆண்டுகளாக கேட்டிருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இருப்பினும் பரவாயில்லை. எத்தனை கேள்விகள் கேட்டாலும், நீங்கள் சமாதானம் ஆகும் வரை பதில் அளிக்கிறேன்.
எத்தனை பேர் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வேண்டாம் என்கிறீர்கள். முதலில், ஆறு வரியாக செலுத்தி வந்ததை, ஜி.எஸ்.டி., என ஒரே வரியாக கொண்டு வரப்பட்டது. ஜி.எஸ்.டி., வரி இல்லாமல் எப்படி மக்கள் பணி மேற்கொள்வது?
ராணுவ வீரர், அரசு அதிகாரிகள், போலீசாருக்கு எப்படி சம்பளம் தர முடியும்; மோடி என்ன தனியாக ரூபாய் நோட்டு அச்சடித்து வருகிறாரா?
எங்களின் உயிரே போனாலும் நீட் தேர்வை எக்காரணம் கொண்டும் ரத்து செய்ய மாட்டோம். முதன்முறையாக ஏழை மாணவ - மாணவியர் நீட் தேர்வு மூலமாக அரசு மருத்துவக் கல்லுாரிக்கு செல்கின்றனர். நீட் தேர்வை எடுத்து தான் அரசியல் செய்ய வேண்டும் என்றால், அது போன்ற அரசியல் எங்களுக்கு தேவையில்லை.
கிராமப்புற ஏழை மாணவர்கள் நீட் தேர்வு மூலமாக மட்டுமே மருத்துவக் கல்லூரிக்கு செல்ல முடியும். இல்லையெனில், டி.ஆர்.,பாலு நடத்தும் தனியார் மருத்துவக் கல்லுாரி, பாலாஜி மெடிக்கல் காலேஜ் என, கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து, எத்தனை பேரால் படிக்க முடியும்.
எந்த குழந்தையும் நீட் தேர்வு காரணமாக இறப்பதில்லை. இறப்பதற்கு துாண்டுகின்றனர். எப்.ஐ.ஆர்., போட்டு ஸ்டாலினை உள்ளே வைத்தால், எந்த குழந்தையும் இறக்காது. 2018 முதல் 2023 வரை, காவிரி நீர் பிரச்னை கிடையாது. கர்நாடகாவில் காங்., ஆட்சி மாறியதும்தான் பிரச்னை துவங்கியது.
நதிநீர் இணைப்புக்கு, 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் வேண்டும். தமிழக அரசிடம் இவ்வளவு உள்ளதா? உங்கள் ஊரில் குடிநீரையே தமிழக அரசால் சரிவர வழங்க முடியவில்லை. இதில், நதிநீர் இணைப்புக்கு எப்படி முன்வருவர். இவ்வாறு அவர் பேசினார்.