பிஎச்.டி., நுழைவுத்தேர்வு முறைகேடு: பேராசிரியர்கள் குற்றச்சாட்டு
பிஎச்.டி., நுழைவுத்தேர்வு முறைகேடு: பேராசிரியர்கள் குற்றச்சாட்டு
UPDATED : டிச 30, 2024 12:00 AM
ADDED : டிச 30, 2024 11:52 AM

மதுரை:
மதுரை காமராஜ் பல்கலை பிஎச்.டி., நுழைவுத் தேர்வு முறைகேடு தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவில் சிண்டிகேட் உறுப்பினர் இடம் பெறாதது மரபு மீறல் என பேராசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இப்பல்கலையில் செப்.22ல் நடந்த பிஎச்.டி., படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வைக்க மாணவர்களிடம் பிஎச்.டி., பிரிவில் உள்ள சிலர் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாணவர்கள், பேராசிரியர்கள் ஆதாரங்களுடன் அனுப்பிய புகார் அடிப்படையில் விசாரணைக் குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்கல்வித்துறை உத்தரவிட்டது.
பயோடெக்னாலஜி புலத்தலைவர் கணேசன் தலைமையில் 5 பேர் குழுவை பல்கலை பதிவாளர் ராமகிருஷ்ணன் (பொறுப்பு) அமைத்தார். இக்குழுவில் சீனியர் பேராசிரியர்கள் இல்லை. ஜூனியர் உதவிப் பேராசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
பிற பல்கலை பேராசிரியர்களையும் குழுவில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் இக்குழு மரபு மீறி அமைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து பேராசிரியர்கள் கூறியதாவது:
பல்கலையில் எந்த சப் - கமிட்டிகள் அமைத்தாலும் அதில் சிண்டிகேட் உறுப்பினர் இடம் பெற வேண்டும் என்பது மரபு. பல சீனியர் உறுப்பினர்கள் இருந்தும் தற்போது அமைக்கப்பட்ட இக்குழுவில் ஒருவர் கூட இடம் பெறவில்லை. இதில் நடுநிலைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் பிற பல்கலையின் பேராசிரியர் ஒருவரும் இடம் பெற்றிருக்க வேண்டும். அதுவும் இல்லை.
அதேநேரம் விசாரணை குழு அறிக்கையை சமர்ப்பிக்க காலஅவகாசம் குறிப்பிட வேண்டும். ஆனால் இதுபோன்ற எவ்வித விதிமுறையும் இக்குழு அமைக்கும் போது பின்பற்றப்படவில்லை. சிண்டிகேட் உறுப்பினர்களிடமும் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக குழு அமைக்கப்பட்டுள்ளது. சிண்டிகேட் உறுப்பினர் இடம் பெறும் வகையில் குழுவில் மாற்றம் செய்ய வேண்டும் என்றனர்.