பயிர்களின் வேரை கேமராவில் கண்காணிக்கும் ரைஸோட்ரான் ஆசியாவில் முதன்முறையாக வேளாண் பல்கலையில் துவக்கம்
பயிர்களின் வேரை கேமராவில் கண்காணிக்கும் ரைஸோட்ரான் ஆசியாவில் முதன்முறையாக வேளாண் பல்கலையில் துவக்கம்
UPDATED : டிச 30, 2024 12:00 AM
ADDED : டிச 30, 2024 11:54 AM

கோவை:
பயிர்களில் வேரின் செயல்பாடுகளை, கேமரா வாயிலாக கண்காணிக்கும் ரைஸோட்ரான் ஆய்வுக்கூடம், கோவை வேளாண் பல்கலையில், ஆசியாவிலேயே முதன்முறையாக நிறுவப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில், ரைஸோட்ரான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பயிர்களின் செயல்பாடு ஆய்வு செய்யப்படுகிறது.
இந்த ஆய்வுக்கூடம் குறித்து, பல்கலை நுண்ணுயிரியல் துறைத் தலைவர் சிவகுமார் கூறியதாவது:
'ரைஸோட்ரான்' என்பது பயிர்களின் வேர்ச்சூழல் மண்டல உயிரிய ஆய்வகம்.
ஒரு விதை நடப்பட்டு, அது முளைவிட்டு, வளர்ந்து, கிளைபரப்பி, பூ, காய், கனி என முழுமையடையும் வரை, ஒவ்வொரு சூழலுக்கு ஏற்ப, பயிரின் அனைத்து நடத்தைகளையும் மண்ணுக்குள் கேமரா பொருத்திக் கண்காணிப்பதுதான் இத்தொழில்நுட்பம்.
இந்த ஆய்வகத்தில் மூன்று சோதனைக் கூடங்கள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும் பயிர்களின் வேரை, மண்ணுக்குள் செருகப்படும் கேமரா தொடர்ந்து கண்காணித்து, நொடிக்கு நொடி, புகைப்படங்களாக அளிக்கும். இத்தகவல்களை நாம் தொடர்ந்து ஆய்வு செய்வோம்.
போதுமான நீர், உரம், நுண்ணூட்டம், வறட்சி, ஒளிச்சேர்க்கை இல்லாமல், போதிய ஒளிச்சேர்க்கையுடன், வேர் மூலம் மருந்து தெளித்தல், இலைவழி மருந்து தெளித்தல், பூச்சிக்கட்டுப்பாடு, வறட்சியில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை சேர்த்து, சேர்க்காமல் என, வெவ்வேறு விதமான சூழல்களை செயற்கையாக உருவாக்கி, அந்தந்த சூழலுக்கேற்ப வேர்கள் வெளியிடும் ரசாயனம், அந்தப் பயிரின் நடத்தை உள்ளிட்டவை தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
இவ்வாறு கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில், அந்தப் பயிரின் மகசூலை அதிகரித்தல், நோயெதிர்ப்பு, வறட்சி தாங்குதல் என, பல்வேறு திறன்களுடன் கூடியதாக மாற்ற இயலும்.
ஆசியாவிலேயே இங்கு மட்டும்தான், இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் 'டேனி' திட்டத்தின் கீழ், ரூ. 9 கோடி மதிப்பில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. 8 அடி உயரம் வரையிலான ஓராண்டுப் பயிர்கள் வரை, இங்கு ஆய்வுக்கு உட்படுத்த முடியும்.
மாணவர்கள், ஆய்வாளர்கள், தனியார் ஆய்வு நிறுவனங்கள் என அனைவருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். இதன் ஆய்வு முடிவுகள் வேளாண் துறைக்கும், விவசாயிகளுக்கும் பெரும் வரப்பிரசாதமாக இருக்கும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.