மாதவிடாய் நேரத்தில் ஓய்வெடுக்க மாணவியருக்கு இளஞ்சிவப்பு அறை
மாதவிடாய் நேரத்தில் ஓய்வெடுக்க மாணவியருக்கு இளஞ்சிவப்பு அறை
UPDATED : நவ 20, 2024 12:00 AM
ADDED : நவ 20, 2024 08:15 PM
கோலார்:
பள்ளி, கல்லுாரிகளில் பெண்களுக்காக சுகாதார வசதியுடன் இளஞ்சிவப்பு ஓய்வறையை தன்னார்வலர் அமைத்துள்ளார்.
மாதவிடாய் காலத்தில் தனி அறை வசதி இல்லாததால் பள்ளி, கல்லுாரி படிக்கும் மாணவியர் பலரும் அவதிப்படுகின்றனர். இத்தகையோரின் தேவைக்கு பெங்களூரை சேர்ந்த ஐ.டி., நிறுவன ஊழியர் அந்தோணி சாஜித் என்பவர், இளஞ்சிவப்பு ஓய்வறையை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
கேரள மாநிலம், கோழிக்கோட்டை சேர்ந்தவர். பல ஆண்டுகளாக பெங்களூரில் வசித்து வருகிறார். இவர், கிங் ஹார்ட் பவுண்டேஷன் மூலம் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.
மாதவிடாய் நேரத்தில் வகுப்புகளை தவறவிடக்கூடாது. இதற்கு பதிலாக தனி அறையில் ஓய்வெடுத்த பின் மீண்டும் வகுப்பிற்கு செல்லலாம் என விருப்பம் தெரிவித்து பணியில் ஈடுபட்டுள்ளார்.
கோலார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவியருக்கு இதுபோன்ற பிரச்னை வந்துவிடக் கூடாது என நினைத்து அவர், முதற்கட்டமாக இரண்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளில், இளஞ்சிவப்பு அறைகளை ஏற்படுத்தினார்.
பல கிராமப்புறங்களில் இருந்து பெரும்பாலான மாணவியர், பள்ளி, கல்லுாரிகளுக்கு பஸ்களில் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. மாதவிடாய் சிலர் சிரமப்படுகின்றனர். கோலார் மதனஹள்ளி கிராஸ் அருகே உள்ள மேல்நிலைப் பள்ளியில் ஐந்து லட்சம் ரூபாய் செலவிலும், வேம்கல் நகரில் உள்ள குருக்கல் அரசு பள்ளி மாணவியருக்கு 5.50 லட்சம் ரூபாய் செலவிலும் ஓய்வறையை அமைத்துள்ளார்.
இந்த அறையில் தலா ஒரு இந்திய மற்றும் ஒரு மேற்கத்திய கழிப்பறை, உடை மாற்றும் அறை, குளியலறை, கை கழுவ பேசின், சானிட்டரி பேட் இயந்திரம், இரட்டை படுக்கை. படிக்க ஒரு நாற்காலி, மேஜை, புத்தகம் வைக்கப்பட்டுள்ளது.
கோலார் தாலுகாவில் கேளனுார் அரசு கர்நாடக பப்ளிக் பள்ளியில், 4 லட்சம் ரூபாய் செலவில் இவர் கட்டிய இளஞ்சிவப்பு அறை, இம்மாதம் 16ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.