பிளஸ் 2 இங்கிலீஸ் எங்களுக்கு ஜூஜூபி மாணவ, மாணவியர் உற்சாகம்
பிளஸ் 2 இங்கிலீஸ் எங்களுக்கு ஜூஜூபி மாணவ, மாணவியர் உற்சாகம்
UPDATED : மார் 06, 2026 11:05 AM
ADDED : மார் 06, 2026 11:09 AM

'பிளஸ் 2 ஆங்கில பாடத்தேர்வு மிக எளிமையாக இருந்தது,' என, பொள்ளாச்சி, உடுமலை பகுதி பள்ளி மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.
பிளஸ் 2 ஆங்கில பாடத்துக்கான பொதுத்தேர்வு நேற்று நடந்தது.
தேர்வு குறித்து மாணவ, மாணவியர் தெரிவித்த கருத்து வருமாறு:
சாதனா, ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மேல்நிலைப் பள்ளி, உடுமலை:
ஆங்கில பொதுத்தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் எளிதாக இருந்தன. மற்ற பகுதியில் கேட்கப்பட்டிருந்த வினாக்கள் அனைத்தும், பாடப்புத்தகத்திலுள்ள வினாக்களாக இருந்ததால், எளிதாக இருந்தது. இலக்கண பகுதியில் கேட்கப்பட்ட வினாக்களும் ஈசியாக இருந்தன.
மைதிலி, ராஜலட்சுமி கெங்குசாமி மேல்நிலைப் பள்ளி, பெதப்பம்பட்டி:
அனைத்து கேள்விகளும் மிகவும் எளிமையாக இருந்தன. அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவு உள்ளது. நான், நுாறு மதிப்பெண்கள் பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
ராகவி, ஜே.எஸ்.ஆர்., மேல்நிலைப் பள்ளி, மடத்துக்குளம்:
ஒரு மதிப்பெண் வினாக்கள், சிறிது சிந்தித்து விடையளிக்கும் வகையில் கேட்கப்பட்டிருந்தது. பகுதி 2 மற்றும் பகுதி 4 வினாக்கள், மிகவும் எளிமையாக இருந்தன. பகுதி 3ல் வினாக்கள் மறைமுக வினாக்களாகவும், மாணவர்களின் திறனை அதிகரிக்கும் வகையில், யோசித்து விடையளிக்கும் வகையில் இருந்தது.
ஷப்ரீன், ஸ்ரீ ஜி.வி.ஜி., விசாலாட்சி மேல்நிலைப் பள்ளி:
ஆங்கில தேர்வு, மிதமாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்தாலும், எளிதாக எழுதிவிட்டோம். மற்ற பகுதி வினாக்களும் எளிமையாக இருந்தது.
இலக்கியா, ஆர்.ஜி.எம்., உடுமலை:
எளிமையான வினாத்தாள் காரணமாக, ஆங்கில பாடத்தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. 3, 5 மதிப்பெண் வினாக்கள், சிந்தித்து விடையளிக்கும் வகையில் அமைந்திருந்தது. இலக்கண வினாக்கள் எளிமையாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள், புத்தக பின்பகுதியிலிருந்தே கேட்கப்பட்டிருந்தது.
நவீன் ராஜ், ஆக்ஸ்போர்டு மேல்நிலைப் பள்ளி, கொங்கல் நகரம்:
ஆங்கில தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள் பெரும்பாலும், புத்தகத்தின் பயிற்சி பகுதியிலிருந்தே கேட்கப்பட்டிருந்ததால், பதில் அளிக்க சுலபமாக இருந்தது. மேலும், 3 மதிப்பெண் கேள்விகளும், பேரகிராப் கேள்விகளும் பள்ளியில் நன்றாக பயிற்சி அளிக்கப்பட்ட பகுதியிலிருந்தே வந்ததால், நம்பிக்கையுடன் எழுதியுள்ளேன். அதிக மதிப்பெண் கிடைக்கும்.
சஞ்சனா, பாரதிய வித்யா மந்திர் பள்ளி, மகாலிங்கபுரம்:
ஆங்கில வினாத்தாள் மிக எளிமையாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள், பாடப்பகுதியில் இருந்து கேட்கப்பட்டது. அப்ரிசியேஷன் மற்றும் உரைநடை பகுதியிலிருந்து ஓரிரு வினாக்கள் உட்பகுதியில் இருந்து கேட்கப்பட்டன. சுழல் பற்றிய குறிப்பு வினாக்கள், பாட பிற்பகுதியில் இருந்தும், தவறுகளை கண்டறிதல் பகுதியில் ஒரு வினா, சிந்தித்து எழுதும்படியும் இருந்தது. மொத்தத்தில் எதிர்பார்த்ததை விட தேர்வு எளிமையாக இருந்தது.
யஷ்வந்த் அஜய், விஸ்வதீப்தி பள்ளி, பொள்ளாச்சி:
ஆங்கில தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்களின் விடைகள், ஒரே மாதிரியாக இருந்ததால் சிறிது குழப்பம் ஏற்பட்டது. மற்றபடி ஆங்கிலத் தேர்வு மிக எளிமையாக இருந்தது. எளிமையாக இருந்ததால், மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதியுள்ளேன்.
ஹர்ஷன், விவேகானந்தா வித்யாலயா பள்ளி, குஞ்சிபாளையம்:
ஆங்கில மொழி வினாத்தாளில் ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிமையாகவும், இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண் வினாக்கள், புத்தக வினாக்களாக கேட்கப்பட்டு இருந்தன. உரிய நேரத்தில் விடைத்தாள் முடிக்கும் வகையில் ஐந்து மதிப்பெண் வினாக்கள் அமைந்து இருந்தது. முழு மதிப்பெண் கிடைக்க வாய்ப்புள்ளது.
தர்ஷிணி பிரியா, கிருஷ்ணா வித்யாலயா பள்ளி, திவான்சாபுதுார்:
ஆங்கில தேர்வில் வினாக்கள் அனைத்தும் எளிமையாக இருந்தது. புத்தகத்தில் உள்ள அனைத்து வினாக்களையும் திரும்ப, திரும்ப பயிற்சி செய்ததால் தேர்வு எளிமையாக இருந்தது. தன்னம்பிக்கையோடு எழுதியுள்ளேன், முழு மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.

