கணினி வழியில் பிளஸ் 2 தேர்வு பார்வையற்ற மாணவருக்கு அனுமதி
கணினி வழியில் பிளஸ் 2 தேர்வு பார்வையற்ற மாணவருக்கு அனுமதி
UPDATED : பிப் 14, 2025 12:00 AM
ADDED : பிப் 14, 2025 12:32 PM

சென்னை:
சென்னையை அடுத்த பூந்தமல்லியில், பார்வைத்திறன் குறைபாடு உடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில், பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஆனந்த், முதல் முறையாக கணினி வழியாக பொதுத்தேர்வு எழுத உள்ளார்.
இதுகுறித்து, பள்ளியின் முதல்வர் அருள் ஆனந்த் கூறியதாவது:
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்த, கன்னியாகுமரியைச் சேர்ந்த பார்வையற்ற மாணவி லிபிகா, 2021லும், நெய்வேலி மாணவி ஓவியா, 2024லும், கணினி வழியாக தேர்வு எழுதினர்.
இதையறிந்த, எங்கள் பள்ளி மாணவர் ஆனந்த், அதுகுறித்த தகவல்களை ஆர்வமுடன் சேகரித்தார். தமிழ், ஆங்கிலத்தில் தட்டச்சு பழகினார். என்.வி.டி.ஏ., என்ற மென்பொருள் வாயிலாக, தான் படித்தவற்றை தட்டச்சு செய்து பழகினார்.
அடுத்த மாதம் நடக்க உள்ள பொதுத்தேர்வை, கணினி வழியில் எழுத அனுமதிக்கும்படி, அரசு தேர்வுகள் துறை இயக்ககத்துக்கு விண்ணப்பித்தார்.
தேர்வுத்துறை இயக்குனர், இணை, துணை இயக்குனர்கள் பள்ளிக்கு நேரில் வந்து, மாணவரையும், கணினி திறமையையும் பரிசோதித்தனர். கடந்த வாரம் ஒரு மாதிரி தேர்வை நடத்தினர். அனைத்திலும் திருப்தி அடைந்த பிறகு, கணினி வழியில் தேர்வெழுத அவருக்கு அனுமதி வழங்கி உள்ளனர்.
அதாவது, வழிகாட்டி என்ற, ஸ்கிரைப் வினாக்களை படிப்பார். இவர், அதற்கான விடைகளை கணினி வழியாக பதிவு செய்வார். அது, தேர்வுத்தாளில் பிரின்ட் எடுக்கப்பட்டு, மற்ற தேர்வுத்தாள்களுடன் அனுப்பப்படும்.
இதன் வாயிலாக, மாநில பாடத்திட்டத்தில் படித்து, கணினி வழியில் தேர்வெழுதும் முதல் மாணவராக ஆனந்த் உள்ளார். இதன் வாயிலாக மற்ற மாணவர்களுக்கு ஊக்கம் அளிப்பவராகவும் மாறுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.