UPDATED : மார் 03, 2025 12:00 AM
ADDED : மார் 03, 2025 09:19 AM

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத் தேர்வுகள் இன்று, 3ம் தேதி துவங்கி 25ம் தேதி வரையும்; பிளஸ்1 பொதுத்தேர்வு வரும், 5ம் தேதி துவங்கி, 27ம் தேதி வரை நடக்கிறது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை, சுல்தான்பேட்டை, மதுக்கரை உள்ளிட்ட ஏழு ஒன்றியங்களில் மொத்தம், 97 பள்ளிகள் உள்ளன.
அதில், பிளஸ்2 பொதுத்தேர்வை, 3,826 மாணவர்கள், 4,345 மாணவியர் என மொத்தம், 8,171 பேர் எழுத உள்ளனர். பிளஸ்1 பொதுத்தேர்வை, 3,572 மாணவர்கள், 4,320 மாணவியர் என மொத்தம், 7,892 பேர் எழுதுகின்றனர்.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள் இரண்டு கட்டமாக நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து, பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று, (3ம் தேதி) துவங்கி, 25ம் தேதி வரையும், பிளஸ் 1 பொதுத்தேர்வு வரும், 5ம் தேதி துவங்கி, 27ம் தேதி வரையும் நடக்கிறது. பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகளில் கல்வித்துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
38 மையங்கள்
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், தனித்தேர்வர் எழுதும் மையம் உள்பட மொத்தம், 38 மையங்களில் பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அறை கண்காணிப்பாளர்கள், அலுவலக பணியாளர்கள், வழித்தட அலுவலர்கள், பறக்கும்படை என மொத்தம், 700க்கும் மேற்பட்டோர் தேர்வுப்பணிகளில் ஈடுபட உள்ளனர்.
வினாத்தாள் இருப்பு
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், ஏழு ஒன்றியங்கள் உள்ளன. அதில், பொள்ளாச்சிக்கு மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியும், கிணத்துக்கடவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என மொத்தம், மூன்று பள்ளிகள், வினாத்தாள் இருப்பு மையங்களாக தேர்வு செய்யப்பட்டன.
இந்த மையங்களில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வினாத்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
எண் ஒட்டுதல்
பிளஸ்2 பொதுத்தேர்வையொட்டி கடந்த சில நாட்களாக விடைத்தாள் தைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதை தொடர்ந்து, தேர்வு நடைபெறும் பள்ளிகளில் உள்ள அறைகளில், மாணவர்களின் எண்கள் ஒட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய அறிவுரைகளை வழங்குகின்றனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறுகையில்,'பிளஸ்2 பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பள்ளிகளில், அடிப்படை வசதிகள் போதுமானதாக உள்ளதா என பார்வையிடப்பட்டுள்ளது.
தவறுகள் ஏதும் நடைபெறாமல் இருக்க, போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது,' என்றனர்.
உடுமலை
உடுமலையில், இன்று துவங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வை 3,911 மாணவர்கள் எழுதுகின்றனர். உடுமலையில் நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கிராமப்புற பள்ளிகள் உட்பட 18 தேர்வு மையங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. 3,911 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
ஒவ்வொரு தேர்வு மையங்களிலும், ஒரு முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர் மற்றும் தேர்வறைக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு மையங்களில் நேற்று முன்தினம் முதன்மை கண்காணிப்பாளர்கள் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து கள ஆய்வு நடத்தினர். அனைத்து மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள் கொண்டு செல்லப்படுகிறது.