UPDATED : டிச 21, 2025 12:49 PM
ADDED : டிச 21, 2025 12:49 PM
புதுடில்லி:
பாரம்பரிய மருத்துவம் குறித்த உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது சர்வதேச உச்சி மாநாடு நடந்தது. அதில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
டில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய அலுவலகத்தை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
யோகா பயிற்சி குறித்த உலக சுகாதார அமைப்பின் அறிக்கையையும், 'ஆயுஷ் துறையில் 11 ஆண்டு கால மாற்றம்' என்ற தலைப்பிலான புத்தகத்தையும், 'அஸ்வகந்தா' குறித்த நினைவு அஞ்சல் தலையையும் வெளியிட்டார். கடந்த 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில், யோகா வளர்ச்சிக்கு சிறப்பாக பங்களித்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
இந்நிகழ்ச்சியில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோசை சந்தித்தது குறித்து, பிரதமர் மோடி தன் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
முழுமையான ஆரோக்கியம், தடுப்பு பராமரிப்பு மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதில் பாரம்பரிய மருத்துவத்தின் மகத்தான ஆற்றல் குறித்து, உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோசுடன் ஒரு பயனுள்ள கலந்துரையாடலை மேற்கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

