UPDATED : ஏப் 11, 2024 12:00 AM
ADDED : ஏப் 11, 2024 10:13 AM

குளித்தலை:
குளித்தலை மகளிர் போலீசார் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளுடன், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கடந்த, 2023-24ம் கல்வியாண்டை முடித்து விடுமுறையில் செல்ல இருக்கும் மாணவ, மாணவியருக்கு வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய விழிப்புணர்வுகளை அளிக்க மாவட்ட நிர்வாகம் ஆலோசனை வழங்கியது.
இதையடுத்து, தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், குளித்தலை அனைத்து மகளிர் எஸ்.ஐ., பானுமதி, மாணவ, மாணவியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய விழிப்புணர்வு அளித்தார்.
அவர் கூறியதாவது:
இதில், விடுமுறையில் செல்லும் மாணவ, மாணவியர் தங்களது பகுதிகள் அல்லது விடுமுறையை கழிப்பதற்காக வெளியூர் செல்லும் மாணவ, மாணவியர் நீர்நிலைகளில் குளிக்க செல்லக்கூடாது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாலியல் மற்றும் புறக்கணித்தல் சம்பந்தமாக பாதிப்பு ஏற்படும்போது உடனடியாக தங்களது பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக, மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.இது சம்பந்தமான புகார்களை தெரிவிக்க, 8903331098 என்ற புதிய, வாட்ஸாப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிற்கு, ஹாய் என்ற மெசேஜ் மட்டும் அனுப்பினால் போதும், அவர்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக தீர்வு செய்யப்படுவதோடு குறைகளை தெரிவிக்கும் பெயர்கள் ரகசியம் காக்கப்படும். மேலும், குழந்தைகளுக்கான, 1098 என்ற அவசர இலவச எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும்.
இதேபோல், குழந்தை திருமணத்தை முற்றிலும் தடுக்க குழந்தைகள் மற்றும் பொற்றோர் விழிப்பாக இருக்க வேண்டும். குழந்தை திருமணத்தை முற்றிலும் தடுக்க, 9 முதல், 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு, 1,521 பெண் ஆசிரியர்களை கொண்டு பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது.எனவே, தங்களது உறவினர்களோ, வெளி நபர்களோ மாணவ, மாணவியருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தினால் அச்சமின்றி தங்களது பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும். அல்லது அவசர எண் 100 மற்றும் அருகில் உள்ள போலீசில் புகாரளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.