UPDATED : ஜூன் 02, 2025 12:00 AM
ADDED : ஜூன் 02, 2025 09:15 PM

சென்னை:
சிந்துார் ஆப்பரேஷன் வெற்றியை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியாமல், கேள்வி எழுப்புகின்றனர் என தமிழக கவர்னர் ரவி தெரிவித்தார்.
சென்னை சிட்டிசன்ஸ் போரம் அமைப்பின் சார்பில், சிந்துார் ஆப்பரேஷன் வெற்றி விழா, தி.நகரில் உள்ள கிருஷ்ணகான சபாவில் நேற்று நடந்தது.
விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:
ஆப்பரேஷன் சிந்துார் வெற்றியை, உலக நாடுகளே ஏற்றுக் கொண்டன. இந்நிலையில், இங்குள்ள சில எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.
இந்தியா வளர்வதை சிலர் விரும்பவில்லை. அவர்கள் மனநிலை மாற வேண்டும். இங்கு பல மொழிகள், கலாசாரங்கள் இருந்தாலும், இந்தியா என்பது ஒரு நாடு. அதுதான் பாரதம்.
போர் என்றால் சில இழப்புகள் ஏற்படும். ஆனால், நாட்டை காப்பதே நம் கடமை. இந்த எண்ணம் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும். முப்படைகளின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பை, நாம் போற்ற வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கை மிக முக்கியமானது. சிலர் அதை வைத்து அரசியல் செய்கின்றனர். நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் வசம்தான் உள்ளது. அவர்கள் கற்கும் கல்வியில், அரசியல் செய்வது நாகரிகமற்றது. தமிழகத்தில், ஆண்டுக்கு 7,000 பேர் பிஎச்.டி., பட்டம் பெறுகின்றனர். ஆனால், அவர்கள் அனைவரும் தகுந்த திறனுடன் இருப்பதில்லை.
அவர்களுக்கு முறையான வழிகாட்டுதல் மற்றும் கல்வியறிவு வழங்கப்பட வேண்டும். ஐ.ஐ.டி.,யில் படிக்கும் மாணவர்கள், திறன் மிகுந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு உரிய கல்வி, வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
இந்தியா யாருக்கும், எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல. அதேசமயம், பயங்கரவாதிகள் வேருடன் அழிக்கப்படுவர். முன்பிருந்த இந்தியா இப்போது இல்லை. வளர்ந்து வரும் இந்தியா; புதிய இந்தியாவாக மாறி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினர்.