செயல்படாத தாட்கோ மேம்பாட்டு பிரிவு: பொதுமக்கள் குற்றச்சாட்டு
செயல்படாத தாட்கோ மேம்பாட்டு பிரிவு: பொதுமக்கள் குற்றச்சாட்டு
UPDATED : ஜூன் 02, 2025 12:00 AM
ADDED : ஜூன் 02, 2025 09:25 PM

சென்னை:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக உருவாக்கப்பட்ட தாட்கோ நிறுவனம், மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன், அந்த சமுதாய மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மாநிலம் முழுதும் உள்ள 38 அலுவலகங்கள் வாயிலாக, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு கடன் வழங்குவது, திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவது உள்ளிட்டவை நடைபெறுகின்றன.
தாட்கோவில், கடந்த மூன்று ஆண்டுகளாக நடக்கும் பல்வேறு முறைகேடுகளால், திட்டங்களின் செயல்பாட்டில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதற்கு, தாட்கோ மேம்பாட்டு பிரிவு அதிகாரிகளின் நிர்வாக அலட்சியம் மற்றும் முறையற்ற கண்காணிப்பே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிலர் கூறியதாவது:
கட்டுமான பணிகளை மேற்கொள்ள துவக்கப்பட்ட நிறுவனம், தற்போது கல்வி, பொருளாதார முன்னேற்றம், வேலைவாய்ப்பு பயிற்சி என, விரிவடைந்துள்ளது.
தாட்கோ நிறுவனம் வழியே செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணித்து, பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, மேம்பாட்டு பிரிவின் கடமை.
ஆனால், தாட்கோவில் இதுபோன்ற பிரிவு இருப்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. அப்பிரிவு அதிகாரிகளின் மெத்தனத்தால், மாவட்டங்களில் உள்ள அலுவலகங்களில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன.
பொதுவாக, திட்டங்களுக்கான கடன்களை மாவட்டங்களுக்கு வழங்குவதோடு, இளைஞர்களின் வயது மற்றும் தேவைக்கு ஏற்ப தொழில்முனைவோர் பயிற்சி வழங்குவது என, விளிம்புநிலையில் உள்ள மக்களுக்கான புதுமையான திட்டங்களை வகுத்து, செயல்படுத்துவது இப்பிரிவின் நோக்கம். ஆனால், தாட்கோ மேம்பாட்டு பிரிவு அதிகாரிகள் இவ்வாறு செயல்படுவதில்லை.
எஸ்.சி., - எஸ்.டி., மக்கள் நலன் கருதி, வெளிப்படைத்தன்மையுடன் தாட்கோவில் நடக்கும் பிரச்னைகளுக்கு, மேம்பாட்டு பிரிவு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.