மாணவர்கள் குறைவாக சேரும் பாடப்பிரிவுகளை மூட உத்தரவு
மாணவர்கள் குறைவாக சேரும் பாடப்பிரிவுகளை மூட உத்தரவு
UPDATED : ஜூன் 02, 2025 12:00 AM
ADDED : ஜூன் 02, 2025 09:27 PM

சென்னை:
மாணவர்கள் குறைவாக சேரும் பாடப்பிரிவுகளை மூடி, அதிக வரவேற்பு உள்ள பாடப்பிரிவுகளை துவக்கும்படி, பல்கலைகளுக்கு உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, பல்கலை பதிவாளர்களுக்கு, உயர் கல்வித் துறை செயலர் சமயமூர்த்தி அனுப்பியுள்ள கடிதம்:
கடந்த மாதம் 15ம் தேதி, உயர் கல்வி துறையின் மேம்பாட்டுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
அதன்படி, சில பல்கலைகளில், நான் முதல்வன் திட்டத்தில், குறைந்த மாணவர்களே வேலைவாய்ப்பு பெறும் நிலையில் அதை மேம்படுத்துவது; வேலைவாய்ப்புக்கான தகுதிகளை மாணவர்களிடம் வளர்ப்பது; உறுப்பு கல்லுாரிகளுக்கும் இத்திட்டம் பற்றி விளக்குவது; வேலை வழங்குவோருடன் தேர்வு கட்டுப்பாட்டாளர்களை உரையாட வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், இன்டெர்ன்ஷிப் வாய்ப்புகளை உருவாக்குவது, வெளிநாடுகளில் படிப்பது, ஆராய்ச்சி செய்வது உள்ளிட்டவற்றுக்கு, உடனடியாக தடையில்லா சான்று வழங்க வேண்டும். மேலும், 30 சதவீத அளவுக்கு ஓய்வு பெற்ற பேராசிரியர்களை நியமிக்கவும் வேண்டும்.
முக்கியமாக மிகக்குறைந்த அளவு மாணவர் சேர்க்கை உள்ள துறைகள் அல்லது பாடப்பிரிவுகளை மூடுவது அல்லது வேறு படிப்புகளுடன் ஒருங்கிணைப்பது, மாணவர்கள் அதிகம் விரும்பும் படிப்புகளை அறிமுகப்படுத்துவது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.