UPDATED : மார் 17, 2026 03:24 PM
ADDED : மார் 17, 2026 03:26 PM
திருப்பூர்:
நடுநிலை, துவக்கப் பள்ளி மூன்றாம் பருவத் தேர்வுகளை வரும் ஏப்., 17க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஏப்., 17ம் தேதிக்குள் தேர்வுகளை முடித்து, தேர்தலுக்கு ஐந்து நாள் முன்பாகவே பள்ளிகளை தேர்தல் கமிஷன் வசம் ஒப்படைக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாளில், 1 - 5; 6 - 9 வகுப்புகளுக்கான மூன்றாம் பருவ தேர்வு குறித்த புதிய அட்டவணை வெளியாக உள்ளது.
ஏப்., 10 - 27 வரை நடுநிலை, துவக்கப் பள்ளி தேர்வுகளை நடத்தி முடிக்க, பள்ளி கல்வித்துறை ஏற்கனவே திட்டமிட்டிருந்தது; நடப்பு கல்வியாண்டில் கடைசி வேலை நாளாக, ஏப்., 30 என, பள்ளி கல்வி நாட்காட்டியில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஏப்., 23ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது.
தேர்தலுக்கு இரண்டு நாள் முன்பாக, ஏப்., 20ம் தேதிக்குள் ஓட்டுச்சாவடி மையங்களான பள்ளிகளை தேர்தல் கமிஷன் வசம் ஒப்படைக்க வேண்டியுள்ளது.
எனவே, 6 - 9 வகுப்பு வரை, 1 - 5 வகுப்பு வரை தேர்வுகள் ஆகியவற்றை, ஏப்., 17க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது; இதற்கான ஆலோசனை நடந்து வரும் நிலையில், ஓரிரு நாளில் துவக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கான தேர்வு குறித்து புதிய அட்டவணை வெளியாக உள்ளது, என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
