UPDATED : அக் 19, 2026 03:03 PM
ADDED : அக் 19, 2026 03:04 PM
நாமக்கல்:
'வரும், 23ல், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. பணி நாடுனர்கள் பங்கேற்று பயன் பெறலாம்' என, நாமக்கல் கலெக்டர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில், மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. அதன்படி, இம்மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும், 23 காலை, 10:30 மணிக்கு நடக்கிறது.
முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, மேலாளர், கணினி இயக்குபவர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், கணக்காளர், காசாளர், தட்டச்சர், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டென்ட் போன்ற பணிகளுக்கு தேர்வு செய்யவுள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர், பிளஸ் 2, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பயிற்சி மற்றும் கணினியியல் (ஜாவா, டேலி) முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித் தகுதி உள்ளோரும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
