UPDATED : அக் 18, 2025 10:30 AM
ADDED : அக் 18, 2025 10:30 AM
சென்னை:
''தனியார் பல்கலை சட்ட திருத்த மசோதாவை எதிர்ப்பவர்கள் பிற்போக்கு சிந்தனை கொண்டவர்கள்,'' எனக்கூறிய காங்கிரஸ் எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகைக்கு, கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., நாகை மாலி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
மாநகராட்சி பகுதிகளில், 25 ஏக்கர்; நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில், 30 ஏக்கர்; மற்ற பகுதிகளில், 50 ஏக்கர் நிலம் இருந்தால், தனியார் பல்கலை அமைக்க வகை செய்யும் சட்ட மசோதா நேற்று, சட்டசபையில் நிறைவேறியது.
அப்போது நடந்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் செல்வப்பெருந்தகை, ''முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள், இந்த மசோதாவை ஆதரிப்பர். பிற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் எதிர்ப்பர்,'' என்றார்.
அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் - நாகை மாலி, ''இந்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் பிற்போக்காளர்கள் என்று, செல்வப்பெருந்தகை கூறியது தவறான கருத்து.
இதை ஏற்க முடியாது. இந்த சட்டத்தால், உயர் கல்வியில் இதுவரை தமிழகம் பின்பற்றி வந்த நல்ல அம்சங்கள் நீர்த்துப் போகும், ஏழைகளின் உயர் கல்வி, இடஒதுக்கீடு பாதிக்கப்படும். உயர் கல்வியில் தனியார் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும்,'' என்றார்.