சுய வேலைவாய்ப்பு கடன் வங்கிகளுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்படுமா?
சுய வேலைவாய்ப்பு கடன் வங்கிகளுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்படுமா?
UPDATED : அக் 18, 2025 10:30 AM
ADDED : அக் 18, 2025 10:31 AM
சென்னை:
தமிழக இளைஞர்களை தொழில் முனைவோராக்கும் சுய வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு, மானியத்துடன் கடன் வழங்க, அரசு பரிந்துரை செய்தாலும், வங்கிகள் கடன் வழங்க தாமதம் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே, கடன் வழங்குவதை உறுதிசெய்ய, கால அவகாசம் நிர்ணயிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக இளைஞர்களை தொழில் முனைவோராக்க, 'நீட்ஸ்' எனப்படும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், அண்ணல் அம்பேத்கர் திட்டம், கலைஞர் கைவினை திட்டம், வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகியவற்றை, தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை செயல்படுத்துகிறது.
இத்திட்டங்களுக்கு, 25 சதவீதம் முதல், 35 சதவீதம் வரை மூலதன மானியம், 3 சதவீதம் - 6 சதவீதம் வட்டி மானியத்துடன் கடன் வழங்க, வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப் படுகிறது.
தொழில் வணிக ஆணையரகம் சார்பில் விண்ணப்பங்களை பரிசீலித்து, பயனாளிகளை தேர்வு செய்து பரிந்துரை செய்தாலும், கடன் வழங்க வங்கிகள் தாமதம் செய்வதாக புகார் எழுந்துள்ளன.
இதுகுறித்து, 'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க தலைவர் மோகன், பொதுச்செயலர் வாசுதேவன் கூறியதாவது:
அரசு திட்டங்களில் பயனாளிகளை தேர்வு செய்து ஒப்புதல் அளித்த பின்பும், தேசிய வங்கிகள் கடன் வழங்குவதற்கான பணிகளை தாமதம் செய்கின்றன. இதனால், தகுந்த நேரத்தில் தொழில் துவங்க முடியாத நிலை ஏற்படுவதால், பலர் முன்வருவதில்லை.
இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி தலையிட்டு, அரசு ஒப்புதல் அளித்த பயனாளிக்கு, 30 நாட்களுக்குள் கடன் வழங்கும் வகையில் கெடு நிர்ணயிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.