கல்லுாரி முதல்வர் அறையில் பேராசிரியர்கள் வாக்குவாதம்; பல்கலை கல்லுாரியில் குஸ்தி
கல்லுாரி முதல்வர் அறையில் பேராசிரியர்கள் வாக்குவாதம்; பல்கலை கல்லுாரியில் குஸ்தி
UPDATED : ஆக 02, 2024 12:00 AM
ADDED : ஆக 02, 2024 10:33 AM

மதுரை:
மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரியில் துறைத் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் முன்னிலையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் தகராறு செய்யும் பேராசிரியர்களுடன் பணியாற்ற முடியாது; பதவியில் இருந்து தன்னை விடுவித்து விடுங்கள் என முதல்வர் புவனேஸ்வரன் பல்கலை கன்வீனருக்கு கடிதம் எழுதியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இக்கல்லுாரியில் பி.ஜி., வகுப்புகள் துவங்குவது தொடர்பான துறைத் தலைவர்கள் கூட்டம் முதல்வர் (பொறுப்பு) புவனேஸ்வரன் தலைமையில் நடந்தது. பி.ஜி., துறைத் தலைவர்கள் பங்கேற்றனர். ஆக., 5 முதல் பி.ஜி., வகுப்புகள் துவங்க ஆலோசிக்கப்பட்டது. அதற்கு பேராசிரியர்கள் ஒரு தரப்பில் சில படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை ஒற்றை இலக்கத்தில் உள்ளது. ஆக., 28 வரை மாணவர்கள் விண்ணப்பிக்க காலஅவகாசம் உள்ளது என தெரிவித்தனர். சிலர், தன்னாட்சி கல்லுாரிகளில் பி.ஜி., வகுப்புகள் துவங்கி 15 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. சேர்க்கை கட்டணம் செலுத்திய மாணவர்களை மேலும் அதிக நாட்கள் காத்திருக்க வைக்க வேண்டாம். வகுப்புகள் துவங்க நடவடிக்கை எடுக்கலாம் என்றனர். இதுதொடர்பாக பேராசிரியர்கள் சிலருக்குள் முதல்வர் முன்னிலையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த முதல்வர் வெளியேறினார். கூட்டம் பாதியிலேயே ரத்தானது.
முதல்வர் புவனேஸ்வரன் கூறியதாவது: மாணவர்கள் குறைவாக உள்ள துறைகளை துவக்கலாமா என்பது தொடர்பாக துறைத் தலைவர் ராணி கேள்வி எழுப்பியபோது மற்றொரு துறை தலைவர் மோகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ராணியை பார்த்து மூக்கு முகரையெல்லாம் பேத்து விடுவேன் என ஒருமையில் பேசினார். அப்போது இதுபோல் பேசுவது சரியல்ல. நீங்கள் இவ்வாறு தகராறு செய்துகொண்டிருந்தால் கல்லுாரியை நடந்த முடியாது. நீங்களே முதல்வர் இருக்கையில் இருந்து கல்லுாரியை நடந்துங்க என கூறிவிட்டு வெளியேறிவிட்டேன். நான் ஏற்கனவே முதல்வர் பதவியில் இருந்து விடுவிக்க கோரி பல்கலைக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றார்.
பேராசிரியர் மோகன் கூறுகையில், கூட்டத்தில் பேராசிரியர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மை. இரு தரப்பிலும் ஒருமையில் பேசினோம். பின் சமாதானமாகிவிட்டோம். அப்போது முதல்வர் வெளியேறிவிட்டார். ஆனால் முதல்வர், அவருக்கு ஆதரவாக செயல்படும் ஆசிரியர்கள் சிலர் இவ்விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டும் என கண்காணிப்பு கேமரா பதிவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர். உண்மை நிலவரம் குறித்து கன்வீனர் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.