UPDATED : செப் 30, 2025 10:45 AM
ADDED : செப் 30, 2025 10:47 AM

மதுரை:
கல்வித்துறையில் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள், விழிப்புணர்வு ஏற்படுத்திய நடமாடும் ஆலோசனை மையம் திட்டம் முடங்கியுள்ளது. இதற்காக பயன்படுத்தப்பட்ட ரூ.பல லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸ் வடிவிலான வேன்கள் பராமரிப்பின்றி உள்ளன.
அரசு, உதவி பெறும் பள்ளிகளில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இளம் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள், குடும்ப நிலை, மனச்சோர்வு, மனக்குழப்பம், பாலியல் பிரச்னை, மதிப்பெண் நெருக்கடி போன்ற உளவியல் பிரச்னைகளில் இருந்து விடுபடுவதற்காக ஆலோசனை வழங்கும் வகையில் இத்திட்டம் 2014ல் கொண்டுவரப்பட்டது.
இதற்காக தலா ரூ.8 லட்சம் மதிப்பில் ஆம்புலன்ஸ் வடிவிலான நடமாடும் வேன் கொள்முதல் செய்யப்பட்டது. அதை இயக்க ஒப்பந்த அடிப்படையில் ஒரு ஓட்டுநர், உளவியல் ஆலோசகர் என்ற நிலையில் டாக்டர் நியமிக்கப்பட்டனர். மூன்று அல்லது இரண்டு மாவட்டங்களுக்கு ஒரு வேன் என ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சம்பளம் சரியாக வழங்காதது, மாவட்ட அளவில் கல்வி அதிகாரிகள் இதை முறையாக பயன்படுத்த தவறியது போன்ற பிரச்னையால் இத்திட்டம் முடங்கியுள்ளது. நடமாடும் வேன்களும் 4 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி அலுவலகங்களில் பராமரிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளன.
குவிந்து கிடக்கும் ரூ.பல லட்சம் மருத்துவ நிதி
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
இந்த நடமாடும் வேனிற்கான பெட்ரோல், சம்பளம் உள்ளிட்ட செலவை ஈடுகட்ட மாணவர்களுக்கு அரசு வழங்கும் சிறப்பு கட்டணத்தில் இருந்து தலா ரூ.1 வீதம் 'மருத்துவ நிதி' என்ற பெயரில் ஒதுக்கப்படுகிறது. மதுரை உட்பட பல மாவட்டங்களில் இந்த வேன் முடங்கி கிடக்கிறது.
ஆனாலும் அந்தந்த சி.இ.ஓ.,க்கள் கணக்கிற்கு மருத்துவ நிதியாக ஒதுக்குவது தற்போதும் தொடர்கிறது. எனவே ரூ. லட்சக்கணக்கில் மருத்துவ நிதிக்கான தொகை மாவட்ட சி.இ.ஓ.,க்கள் கணக்கில் குவிந்து கிடக்கிறது. ஒரு மாவட்டத்தில் இந்த வேன் நிறுத்துவதற்கான 'ஷெட்' ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்டது.
ஆனால் அந்த 'ஷெட்' எங்கே என தேடும் நிலையில் உள்ளது. மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனை வழங்கும் இத்திட்டத்தை காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் முழுவீச்சில் மீண்டும் செயல்படுத்த கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.