UPDATED : செப் 30, 2025 10:52 AM
ADDED : செப் 30, 2025 10:53 AM
சென்னை:
பள்ளிக் கல்வி துறையின் கீழ் மலைப் பகுதிகளில் இயங்கும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு, ஆசிரியர்களை பணியிட மாறுதல் செய்வதில், அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாக, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, மீண்டும் அவர்கள் பழைய பள்ளிகளுக்கே மாற்றப்பட்டு உள்ளனர்.
நீலகிரி, கிருஷ்ணகிரி, வேலுார், ஈரோடு, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மலைப்பகுதி மாவட்டங்களில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இச்சலுகைகளை பெற, அங்கு மாறுதல் கேட்டு பெற்று, சிறிது காலத்தில் அதிகாரிகளை, 'கவனித்து' சமதளப் பகுதி பள்ளிகளில் மாற்றுப்பணி பெற்று செல்வதாக புகார் எழுந்தது. இது குறித்த செய்தி, நம் நாளிதழில் வெளியானது.
இதையடுத்து, மலைப்பகுதி பள்ளிகளில் பணியாற்றுவோரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டன. தற்போது, அவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் மலைப்பகுதி பள்ளிகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர்.