தமிழகத்தில் அறிவிப்போடு நிற்கும் 'ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்' பணியிடம்
தமிழகத்தில் அறிவிப்போடு நிற்கும் 'ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்' பணியிடம்
UPDATED : செப் 30, 2025 10:53 AM
ADDED : செப் 30, 2025 10:56 AM

மதுரை:
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் 'ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்' பணியிடம் நிரப்பப்படும் என்ற அறிவிப்போடு நிற்கிறது. பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர வேண்டும்.
உடல், மனவளர்ச்சி உட்பட பல்வேறு குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளில் டி.இ.ஐ.சி., எனப்படும் மாவட்ட ஆரம்பநிலை இடையீட்டு சிகிச்சை மையம் துவக்கப்பட்டது. தேசிய சுகாதார இயக்கத் திட்டத்தின் கீழ் குழந்தைகள் நலப்பிரிவுடன் இணைந்து இப்பிரிவு செயல்படுகிறது.
இதில் மனநலம், முடநீக்கியல் துறை, சிறப்பு கல்வி, பேச்சுப்பயிற்சி, 'ஆக்குபேஷனல் தெரபி' என ஒவ்வொரு பிரிவின் கீழும் சிறப்பு நிபுணர்கள் நியமிக்கப்பட்டு குழந்தைகளின் உடல், மனநலத்தை மதிப்பீடு செய்கின்றனர். பாதிப்பின் தன்மையைப் பொறுத்து குழந்தைகளுக்கான சிகிச்சையும் ஆலோசனையும் வழங்கப்படுகிறது.
டாக்டர்கள், நர்ஸ்களைத் தவிர பிற சிறப்பு நிபுணர்கள் அனைவரும் தேசிய சுகாதார இயக்கத் திட்டத்தின் கீழ் தற்காலிக வேலை அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 'ஆக்குபேஷனல் தெரபி' பணியிடம் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது, ஆட்களை நியமிக்கவில்லை.
அவசியமான பணியிடம் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கை, கால் இயக்கத்தை சீர்படுத்தி பல் துலக்குவது, குளிப்பது, சட்டை மாட்டுவது, சாப்பிடுவது, நடப்பது போன்ற அன்றாடப் பணிகளை அவர்களே சுயமாக செய்யும் அளவிற்கு பயிற்சி தருவது தான் 'ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்' வேலை.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 18 வயதிற்குட்பட்ட 500க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் காத்திருக்கின்றனர். தங்கள் வேலையை தாங்களே பார்ப்பதற்கான பயிற்சி அளிக்கும் போது தான், மற்றவர்களை சார்ந்திராமல் அவர்களால் சுயமாக வாழ முடியும். அறிவிப்போடு நின்றுபோன இப்பணியிடங்களை தமிழகம் முழுவதும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.