புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கு அகில இந்திய தரவரிசையில் 238வது இடம்: எம்.எல்.ஏ., வேதனை
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கு அகில இந்திய தரவரிசையில் 238வது இடம்: எம்.எல்.ஏ., வேதனை
UPDATED : மார் 20, 2025 12:00 AM
ADDED : மார் 20, 2025 09:04 AM
புதுச்சேரி:
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக அகில இந்திய தரவரிசையில் 8வது இடத்தில் இருந்து 238வது இடத்திற்கு மிக மோசமான நிலைக்கு சென்று விட்டதாக கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., வேதனை தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் உரை மீதான பொது விவாதத்தில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பேசியதாவது;
புதுச்சேரியில் பெரும்பாலன அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால், தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் கீழ் மாற்றப்பட்டாலும், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை. மாணவர்களுக்கான லேப்டாப் 5 ஆண்டிற்கு வாரண்டியுடன் தரமானதாக வழங்க வேண்டும்.
தமிழகத்தை ஒட்டியுள்ள காலாப்பட்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதால், பி.எம். ஸ்ரீ திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள், கழிப்பறைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.
அரசு பொறியியல் கல்லுாரியை பல்கலை கழகமாக மாற்றியதன் நோக்கமே வீணாகிவிட்டது. 2011 ஆண்டு அகில இந்திய பொறியியல் கல்லுாரிகள் தரவரிசையில் 8வது இடத்தில் இருந்த கல்லுாரி, தற்போது 238 வது இடத்திற்கு பின்னோக்கி சென்றுள்ளது. தனியார் கல்லுாரிகளை விட மிக மோசமான நிலையில் தொழில்நுட்ப பல்கலைகழகம் உள்ளது.
புதுச்சேரி அரசு தனி கவனம் செலுத்தி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர்கல்வி நிலையங்கள் உள்ள லாஸ்பேட்டை பகுதியில் கல்லுாரி விழாக்கள் நடத்த ஆடிட்டோரியம் கட்டிதர வேண்டும் என, கூறினார்.