UPDATED : ஆக 14, 2024 12:00 AM
ADDED : ஆக 14, 2024 08:24 AM

கோவை :
கோவை பாரதியார் பல்கலையில், கல்லுாரி மேம்பாடு கவுன்சில் நியமனத்தில், சீனியாரிட்டியில், 32வது இடத்தில் இருந்த நபரை நியமித்ததில், முறைகேடு நடந்துள்ளதாகவும், ஒவ்வொரு முறை கல்லுாரிகளில், இன்ஸ்பெக் ஷன் குழு அமைக்கும் போதும், குறிப்பிட்ட சில நபர்களை மட்டும் அனுப்புவதாகவும், அவர்கள், கல்லுாரி நிர்வாகத்தினரிடம் பணம் வசூல் செய்வதாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில், 58 கவுரவ விரிவுரையாளர் பணி நியமனத்தில், துணைவேந்தர் பொறுப்பு குழுவில் உள்ள பல்கலையைச் சேர்ந்த ஒரு பெண் அதிகாரி மீது, விசாரணை குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
செயலர் அனுமதி
இந்த விசாரணை குழு அமைப்பதிலும், கோப்புகளை கையாள்வதிலும் சம்பந்தப்பட்ட அதிகாரியின் தலையீடு அதிகம் உள்ளதாகவும், இருப்பினும், பொறுப்பில் தொடர, உயர் கல்வித்துறை செயலர் அனுமதித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
கல்வியியல் தொழில்நுட்ப பிரிவில், பணி நியமனம் செய்யப்பட்ட ஒரு நபருக்கு, விதிமுறை மீறி, கல்வியியல் பிரிவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின், ரூசா திட்டத்தில், கொள்முதல் செய்யப்பட்ட இயந்திரத்தை, கூடுதல் விலை கொடுத்து வாங்கியதாக எழுந்த புகாரின்படி, பல்கலைக்கு பல லட்சம் ரூபாய் நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது.
கம்ப்யூட்டர் கொள்முதல் முறைகேட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் சிக்கிய நபர்கள் தற்போதும் சிண்டிகேட், நிதிக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் பொறுப்பு வகித்து, விசாரணையின் போக்கை மாற்றி வருவதாக புகார் எழுந்துள்ளது.
பல்கலையில் உள்ள விடுதிகளில், வார்டன் பொறுப்பு, உதவி பேராசிரியர் நிலையில் இருப்பவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.
வார்டன் பதவி
ஆனால், பேராசிரியர் நிலையில் உள்ளவர்களுக்கு வார்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. பலர் பத்தாண்டுகளாக இப்பதவியில் தொடர்வதால், பாத்திரங்கள் வாங்குவது உட்பட பல்வேறு விஷயங்களில், முறைகேடு புகார் எழுந்துள்ளது.
முக்கிய கோப்புகள் வைக்கப்பட்டிருந்த அறையின் சாவியை, ஒரு பெண் அதிகாரி வைத்திருந்ததாகவும், அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் பல முறை கேட்ட போதும் கொடுக்க மறுத்து வந்தார்; பின், அவர் அந்த சாவியை, அதிகாரிகளிடம் ஒப்படைத்தார் என கூறப்படுகிறது.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியை தொடர்பு கொண்டபோது, அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.
பதிவாளர் - பொறுப்பு ரூபா குணசீலனிடம் கேட்டதற்கு, லஞ்ச ஒழிப்புத்துறை சார்ந்த விசாரணை நடப்பதால், அது குறித்து தற்போது எதுவும் பேச முடியாது, என்றார்.