UPDATED : ஜூலை 17, 2024 12:00 AM
ADDED : ஜூலை 17, 2024 10:18 AM
திருப்பூர்:
பள்ளி கல்வித்துறை சார்பில், குறுமைய விளையாட்டு போட்டி விரைவில் துவங்க உள்ளது. இப்போட்டிகளை ஏழு குறுமையங்களில் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், திருப்பூர், குமார் நகர், பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. மாவட்டம் முழுதும் இருந்து உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
முத்துார் அரசு மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் குணசேகரன் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) காளிமுத்து தலைமை வகித்தார். பிஷப் பள்ளி தலைமை ஆசிரியர் பீட்டர் மரியதாஸ் முன்னிலை வகித்தார்.
நடப்பாண்டு குறுமைய போட்டியை முன்னின்று, நடத்த போகும் பள்ளிகள், பொறுப்பு விபரம் வெளியிடப்பட்டது. அதன்படி, திருப்பூர் தெற்கு பள்ளிகளுக்கான போட்டியை பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி; திருப்பூர் வடக்கு பகுதி பள்ளிகளுக்கான போட்டியை, 15 வேலம்பாளையம், ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி; அவிநாசி குறுமைய போட்டியை, பச்சாபாளையம், எஸ்.கே.எல்., மெட்ரிக் பள்ளி; பல்லடம் குறுமைய போட்டியை, பூமலுார் அரசு உயர்நிலைப்பள்ளி; உடுமலை வட்டார பள்ளிகளுக்கான குறுமைய போட்டியை, உடுக்கம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி; தாராபுரம் குறுமைய போட்டியை, மூலனுார் மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளி; காங்கயம் வட்டார பள்ளிகளுக்கான போட்டியை, வெள்ளகோவில், அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி நடத்த உள்ளது. புதிய விளையாட்டு போட்டிகள், முத்துார், அரசு மேல்நிலைப் பள்ளியில் நடக்கவுள்ளது.
நடுவர்கள் நடுநிலை தவறக்கூடாது
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் பேசியதாவது:
மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒவ்வொரு பள்ளியிலும் முதன்மை விளையாட்டுகளில் ஒன்றைக் கட்டாயம் பயிற்சியளிக்க வேண்டும். தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்களை கொண்ட, பள்ளி விளையாட்டு குழு உருவாக்கி, மாணவர்களை அனைத்து போட்டிகளிலும் பங்கேற்கச் செய்து, மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பரிசு பெற ஊக்கப்படுத்த வேண்டும்.கபடி போட்டிக்கு எடை பிரிவு சரியான அளவில் கணக்கிட வேண்டும்; எவ்வித தளர்வும் அளிக்கக் கூடாது.
குறுமைய செயலாளர், இணைச் செயலாளர், கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் விழிப்புணர்வுடன் கண்காணித்து, எந்தவித புகாருக்கும் இடமளிக்காத வகையில் போட்டிகளை நடத்த வேண்டும்.நல்ல வீரர் பாதிக்கப்படுவர் என்பதால், -போட்டியின் நடுவர்கள் நடுநிலைமை தவறாது பணியாற்ற வேண்டும். போட்டிகளை பாதுகாப்பான முறையில், முறையான மருத்துவ வசதி, குடிநீர் மற்றும் நிழற்குடைகள் அமைத்து நடத்த வேண்டும்.
இவ்வாறு, மகேந்திரன் பேசினார்.