மழை நீர் ஒழுகும் பள்ளி கட்டடம் நாடக மேடைக்கு மாறிய வகுப்பு
மழை நீர் ஒழுகும் பள்ளி கட்டடம் நாடக மேடைக்கு மாறிய வகுப்பு
UPDATED : அக் 21, 2024 12:00 AM
ADDED : அக் 21, 2024 08:22 AM
வடமதுரை :
அய்யலுார் கோடாங்கிசின்னான்பட்டியில் பள்ளி கட்டடம் மழையால் ஒழுகியதால் அருகில் இருக்கும் நாடக மேடைக்கு வகுப்பு இடம் மாற்றப்பட்டுள்ளது.
அரசு துவக்கப் பள்ளியான இங்கு தற்போது 43 மாணவர்கள் படிக்கின்றனர். இங்குள்ள கட்டடம் பழமையானதாகவும், கூரை தளத்தின் மீது யாரும் அக்கறை செலுத்தததால் மழை நீர் தேங்கி உட்புறமாக சொட்டு சொட்டாக விழுகின்றன.
இதனால் இங்கு செயல்பட வேண்டிய 1 முதல் 3 வகுப்பு வரையான மாணவர்களது வகுப்பு அருகில் இருக்கும் நாடக மேடைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. இங்கு திறந்த வெளியில் கவன சிதறலுடன் கல்வி கற்க வேண்டியுள்ளதால் தரம் பாதிப்பு ஏற்படுகிறது. விரைவில் மராமத்து பணி செய்து மழை நீர் ஒழுகுவதை தடுக்க வேண்டும்.
ஒன்றிய பொறியாளர்கள் கூறுகையில், அரசு கட்டடங்களை பொறுத்தவரை கட்டி முடித்த பின்னர் ஒப்படைக்கும் பின்னர் பயன்படுத்தும் துறையினர் சிறிதளவாவது அக்கறை காட்டி செயல்பட வேண்டும்.
ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒரு முறை மேல்தளத்தில் சேகரமாகும் மர இலை, தழை உள்ளிட்ட குப்பையை அகற்றினால் அடைப்பு ஏற்படாது. இதன் மூலம் நீர் தேங்குவது தவிர்க்கப்பட்டு கட்டடத்தின் ஆயுள் அதிகரிக்கும்.
ஆனால் நடைமுறையில் பயன்படுத்தும் அரசு துறைகளிடம் அலட்சியமே அதிகமுள்ளதால் கட்டடங்கள் விரைவில் பழுதாகிவிடும் அவலம் உள்ளது என்றனர்.

