டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு விசாரணைக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு விசாரணைக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
UPDATED : ஆக 01, 2024 12:00 AM
ADDED : ஆக 01, 2024 03:42 PM
சென்னை:
டி.என்.பி.எஸ்.சி., இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணிக்கான தேர்வு முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
பி.காம்., பட்டப்படிப்பில் வேறு பிரிவை தேர்வு செய்ததாகக் கூறி, டி.என்.பி.எஸ்.சி., இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் தேர்வில் வெற்றி பெற்ற, 163 பேருக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். வேலை மறுக்கப்பட்ட 163 பேரும் சமமாக நடத்தப்படவில்லை. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலரின் அழுத்தத்தால், அண்ணாமலை பல்கலையில் படித்த, 36 பேர் தாக்கல் செய்த உண்மைத்தன்மை சான்றிதழை, டி.என்.பி.எஸ்.சி., ஏற்றுக் கொண்டுள்ளது.
அவர்களுக்கு முதல்வர் இன்று பணி நியமனச் சான்று வழங்கவிருக்கிறார். தேர்ச்சி ரத்து செய்யப்பட்ட 163 பேரில்36 பேருக்கு மட்டும் பணி வழங்குவது, எந்த வகையில் நியாயம் எனத் தெரியவில்லை.
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலர் இணைந்தால், விதிகளை மாற்றலாம் என்றால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி., அதன் புனிதத்தை இழந்து விடும். எனவே, 163 பேரும் இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணியில் சேர அனுமதிக்க வேண்டும். அதுவரை 36 பேருக்கு பணி நியமனச் சான்று வழங்குவதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.