கே.வி., பள்ளி இட ஒதுக்கீடு எம்.பி.,க்களுக்கு மறுப்பு
கே.வி., பள்ளி இட ஒதுக்கீடு எம்.பி.,க்களுக்கு மறுப்பு
UPDATED : ஆக 01, 2024 12:00 AM
ADDED : ஆக 01, 2024 03:45 PM

புதுடில்லி:
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் மாணவர் சேர்க்கையில், எம்.பி.,க்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படாது என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி.,க்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு எம்.பி.,யும் ஆண்டுக்கு தலா 10 மாணவர்களின் சேர்க்கைக்கு பரிந்துரைக்க முடியும்.
இதன்படி, 543 லோக்சபா உறுப்பினர்கள், 245 ராஜ்யசபா உறுப்பினர்கள் மொத்தம் 7,880 மாணவர்களை பரிந்துரை செய்து வந்தனர்.
இந்த நடைமுறை கடந்த 2022ல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், ராஜ்யசபாவின் கேள்வி நேரத்தின் போது, மத்திய கல்வித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
எம்.பி.,க்கள் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அனுமதிப்பதால் ஒதுக்கப்பட்ட இடங்களை விட, கூடுதல் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.
இதனால் கற்றல் பாதிக்கப்படுகிறது. எனவே, மாணவர் சேர்க்கையில் எம்.பி.,க்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் நடைமுறையை மீண்டும் கொண்டு வரும் திட்டம் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.