ராமநாதபுரம் மாணவர் ஸ்ரீரஷீத் ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதனை
ராமநாதபுரம் மாணவர் ஸ்ரீரஷீத் ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதனை
UPDATED : ஏப் 24, 2025 12:00 AM
ADDED : ஏப் 24, 2025 10:17 AM
 ராமநாதபுரம்:
 ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீரஷீத் 22, ஐ.ஏ.எஸ்., தேர்வில் அகில இந்திய அளவில் 52வது இடமும், தமிழக அளவில் 5ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
ராமநாதபுரத்தை சேர்ந்த முன்னாள் வர்த்தக சங்கத்தலைவர் தனபால். இவரது பேரனும், தொழிலதிபர் ராம்பிரகாஷ்-  லட்சுமி தம்பதியின் மகனுமான ஸ்ரீரஷீத் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட இந்திய குடிமைப்பணிகளுக்கான 2024 யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீஸ் இறுதித்தேர்வு எழுதினார். நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது.
இதில் ஸ்ரீரஷீத் இந்திய அளவில் 52 வது இடமும், தமிழக அளவில் 5வது இடம் பெற்றுள்ளார். 
வெற்றி குறித்து ஸ்ரீரஷீத் கூறியதாவது:
சிறுவயது முதல் ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. தாத்தா, பெற்றோர், ஆசிரியர்கள் அதற்கு வழிகாட்டினர். ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை ராமநாதபுரம் விவேகானந்தர் வித்யாலயா பள்ளியிலும், 6 முதல் 8 வரை ராமநாதபுரம் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், 9 முதல் பிளஸ் 2 வரை மண்டபம் கேந்திரிய வித்யாலயா பள்ளியிலும் படித்தேன்.
பத்தாம் வகுப்பு தேர்வில் 93 சதவீதம், பிளஸ் 2 தேர்வில் 95 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்தேன். புதுடில்லியில் உள்ள மோதிலால் நேரு கலை அறிவியல் கல்லுாரியில் பி.ஏ., ஹானர்ஸ் (honors) படித்தேன். அதன் பிறகு ஐ.ஏ.எஸ்., தேர்விற்காக பயிற்சி வகுப்புகளுக்கு சென்றேன்.
முதல் முறையாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி தற்போது 52 வது ரேங்க் கிடைத்துள்ளது மகிழ்சியாக உள்ளது. நிதித்துறையில் ஆர்வம் உள்ளது. ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பாடுபடுவேன் என்றார்.

