நடனக் கலைஞர்களுக்கு விழிப்புணர்வு அளித்த ரம்யா சங்கரன்
நடனக் கலைஞர்களுக்கு விழிப்புணர்வு அளித்த ரம்யா சங்கரன்
UPDATED : ஏப் 04, 2024 12:00 AM
ADDED : ஏப் 04, 2024 08:51 AM
நடனத்தை ரசிப்பதும், அதை மெருகேற்றுவதில் மட்டுமே, பெரும்பாலான கலைஞர்கள் ஆர்வம் காட்டும் நிலையில், நடனக்கலைஞர்கள், தங்கள் உடல், மனம் வலுவிழக்காமல் கவனித்துக் கொள்வது எப்படி என்பது குறித்த, சிந்தனை பலருக்கும் வருவதில்லை; அதன் விளைவு, இளம் பருவத்தில், தாங்கள் கற்ற கலையில் கைதேர்ந்தவர்களாக விளங்கும் கலைஞர்கள், குறிப்பிட்ட வயதுக்கு பின், ஓய்வெடுக்க வேண்டியிருக்கிறது.
இந்த சிந்தனையின் அடிப்படையில், திருப்பூர் கவிநயா நாட்டியாலயா நடனப்பள்ளி நிறுவனர் மேனகா ஏற்பாட்டில், அமெரிக்கா நியூ ஜெர்ஸியில் வசிக்கும் இந்திய வம்சா வழியை சேர்ந்த ரம்யா சங்கரன், 34 என்பவர் வாயிலாக, நடனம் மற்றும் யோகா கலைஞர்கள், உடல் காயம் ஏற்படாமல், தங்கள் கலையை தொடர்ந்து கற்பது குறித்த பயிற்சியை வழங்கினர். காயம் ஏற்பட்டால், அதில் இருந்து எவ்வாறு விடுபடுவது என்பது குறித்த விளக்கத்தையும் வழங்கினார். பரதம், மோகினியாட்டம், யோகா ஆகிய கலைகளை மையப்படுத்தி, அவர், இந்த பயிற்சி வழங்கினார்.
ரம்யா சங்கரன் கூறியதாவது:
ஒவ்வொரு நடனத்தின் போதும், உடலில் எந்தெந்த தசைகளின் அசைகின்றன என்பது குறித்தும், அதில் காயம் ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி என்பது குறித்து பலரும் அறியாமல் உள்ளனர்; அதுகுறித்த விழிப்புணர்வை, நடனக் கலைஞர்களுக்கு வழங்கியுள்ளேன். சிறு வயது முதல் நடனப்பயிற்சி பெற்று, நடனமாடி வரும் பலர், தங்களின் உடல் நலனில் அக்கறை காட்டாத பட்சத்தில், 18 வயதுக்கு மேல் நடனமாட சிரமப்படுவர். இதை தவிர்க்க, இதுபோன்ற பயிற்சிகள் அவசியம். நடனத்தின் மீது மட்டுமே நாட்டம் கொண்டுள்ளவர்களுக்கு, அவர்களின் உடல் மற்றும் மனம் சார்ந்த கற்பிக்கப்படும் விஷயங்கள், மிகுந்தபயனளிப்பதாக கூறுகின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.