UPDATED : ஏப் 04, 2024 12:00 AM
ADDED : ஏப் 04, 2024 08:52 AM

உடுமலை:
உடுமலை, சுற்றுப்பகுதியில் கோடை வெப்பம் அதிகரித்து வருவதையொட்டி, பறவைகளுக்கு தண்ணீர் வைக்க சுற்றுச்சூழல் சங்கத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
கோடையின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகரித்த நிலையில் தான் உள்ளது. ஏப்., இறுதியில் ஆரம்பமாக கோடைக்காலம், மார்ச் முதலே தலைகாட்ட துவங்கிவிட்டது. காலநிலை மாற்றத்தால், ஒவ்வொரு ஆண்டும், கோடைத்தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடையில் மனிதர்களுக்கும் நீர்ச்சத்து குறைபாட்டினால், நோய்பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதால், தண்ணீர் அதிகம் குடிக்க மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர்.
கோடையின் தாக்கம் காகம், குருவி, மைனா என ஆங்காங்கே தண்ணீருக்கும் உணவுக்கும் தேடி தவிக்கும் பறவைகளையும், விட்டு வைக்காமல் வாட்டி எடுக்கிறது. கோடையை சமாளிக்க, பறவைகளும் பரிதவித்து வருகின்றன. குறிப்பாக குடியிருப்புகளிலும், வணிக வீதிகளிலும் உணவுக்கும், தண்ணீருக்கும் தவித்து பறவைகள் சுற்றுகின்றன.
உடுமலை சுற்றுச்சூழல் சங்கத்தலைவர் மணி கூறியதாவது:
கோடையின் போது, மனிதர்களுக்கு மட்டுமின்றி, இதுபோன்ற பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தண்ணீர் அதிகம் தேவைப்படுகிறது. வனவிலங்கள், நீர்நிலைகளை கண்டறிந்து பயன்படுத்திக்கொள்கின்றன. ஆனால், மக்களோடு ஒன்றிணைந்து நம் வீடுகளையும், குடியிருப்புகளை சுற்றிக் கொண்டிருக்கும் சில பறவைகளின் நிலை மோசம்தான். பெரும்பான்மையான வீடுகளில் பறவைகளுக்கு, தற்போது இது வழக்கமாகி விட்டது. சிட்டுக்குருவிகள் தான் அதிகம் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் சுற்றுகின்றன. கோடையில் அவை பாதிக்கப்படாமல் தவிர்க்க, அகன்ற பாத்திரங்களில் தண்ணீர் சிறிதளவு நாள்தோறும் வைக்கலாம்.
இதுகுறித்து, சில பள்ளி ஆசிரியர்களிடம் கூறியும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெரிவித்தோம். ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் குழந்தைகள் பள்ளி சுற்றுச்சுவரில் தண்ணீர் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு, தெரிவித்தார்.