கலைக்கல்லுாரியில் வரலாற்றுத்துறை தேவை: கல்வியாளர்கள் வலியுறுத்தல்
கலைக்கல்லுாரியில் வரலாற்றுத்துறை தேவை: கல்வியாளர்கள் வலியுறுத்தல்
UPDATED : ஏப் 04, 2024 12:00 AM
ADDED : ஏப் 04, 2024 08:54 AM
உடுமலை:
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், அடுத்த கல்வியாண்டில், வரலாற்றுத்துறையை துவக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், 2 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். மடத்துக்குளம், உடுமலை, தாராபுரம் என திருப்பூர் மற்றும் கோவை புறநகர் பகுதிகளைச்சேர்ந்த மாணவர்களின் உயர்கல்வியில், உடுமலை கல்லுாரி முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லுாரி துவங்கி, 40 ஆண்டுகளுக்கும் மேலாகியும், வரலாற்றுத்துறை மட்டும் இதுவரை துவக்கப்படவில்லை.
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச்சேர்ந்த மாணவர்கள், அரசு கலைக்கல்லுாரியை மட்டுமே தங்கள் உயர் கல்விக்கு நம்பியுள்ளனர். குறிப்பாக, வரலாறு உட்பட படிப்புகளை இளங்கலையில் முடித்து, அரசின் போட்டித்தேர்வுகளுக்கு, தயாராக மாணவர்கள் உள்ளனர். மாநிலத்திலுள்ள அனைத்து அரசு கலைக்கல்லுாரிகளிலும், வரலாற்றுத்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், உடுமலை கல்லுாரியில் மட்டும் இந்த படிப்பு துவக்கப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது என, மாணவர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், வரலாற்றுத்துறை துவங்கியிருந்தால், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்றிருப்பார்கள். மேலும், இத்துறையில், ஆய்வியல் மாணவர்களும், முனைவர் பட்ட ஆய்வாளர்களும் உருவாக வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். கல்லுாரியில், கட்டமைப்பு வசதிகளையும் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.
வரலாற்றுத்துறைக்கு தேவையான பேராசிரியர்கள் உட்பட வசதிகள் இருப்பதால், வரும் கல்வியாண்டில், இத்துறையில் மாணவர் சேர்க்கையை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.