வாசகர்களே புத்தகம் படிக்க தயாரா? டிச., 20 முதல் 10 நாட்கள் திருவிழா!
வாசகர்களே புத்தகம் படிக்க தயாரா? டிச., 20 முதல் 10 நாட்கள் திருவிழா!
UPDATED : டிச 18, 2024 12:00 AM
ADDED : டிச 18, 2024 05:51 PM
சிவாஜி நகர்:
புத்தகம் வாசிக்கும் மாணவர்கள், பெரியவர்கள் படிப்பு தாகத்தை தீர்க்கும் நேரம் இதோ வந்துவிட்டது. கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில், மூன்றாம் ஆண்டு, தமிழ் புத்தக திருவிழா வரும் 20ம் தேதி துவங்குகிறது.
அறிவு களஞ்சியத்தை பல மடங்கு பெருக்குவதில், புத்தகம் முக்கிய பங்காற்றுகிறது. புத்தகம் வாசிப்பவர்களின் தாகத்தை தீர்ப்பதற்காக மூன்றாவது தமிழ் புத்தக திருவிழா, பெங்களூரு சிவாஜி நகர் அம்பேத்கர் வீதியில் உள்ள, தி இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியரிங் வளாகத்தில், வரும் 20ம் தேதி துவங்குகிறது. அன்று முதல் 29ம் தேதி வரை 10 நாட்கள் புத்தக திருவிழா நடக்கிறது.
இஸ்ரோ சிவன்
வரும் 20ம் தேதி காலை 10:00 மணிக்கு, தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவருமான ராம்பிரசாத் மனோகர் தலைமையில், இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் துவக்கி வைத்து பேசுகிறார். புத்தக திருவிழாவின் தலைவர் வணங்காமுடி நோக்க உரை ஆற்றுகிறார்.
தமிழக அரசின் அயலக தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி வாழ்த்துரை வழங்குகிறார். அன்று மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை, நம்ம ஊர் தமிழ் மக்கள் குழுவினரின் கலை மாலை நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை கன்னட கருத்தரங்கம் நடக்கிறது. கன்னட வளர்ச்சி ஆணைய முன்னாள் தலைவர் எல்.ஜி., சித்தராமையா தலைமை வகிக்கிறார்.
மயில்சாமி அண்ணாதுரை
வரும் 21ம் தேதி காலை 10:00 முதல் காலை 11:00 மணி வரை, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான தமிழ் மொழி திறன் போட்டிகள் துவக்க விழாவை, மேற்கு வங்க அரசின் முன்னாள் கூடுதல் தலைமை செயலர் பாலசந்திரன் துவக்கி வைக்கிறார். சுங்கத்துறை முன்னாள் கூடுதல் இயக்குனர் மணிவாசகம் தலைமை தாங்குகிறார்.
மதியம் 2:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை வெற்றி அரங்கம்; மாலை 5:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பாராட்டரங்கம். தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், கர்நாடக அரசின் தொழில் துறை முதன்மை செயலருமான செல்வகுமார் சிறப்புரை. மாலை 6:00 மணிக்கு இலக்கிய மாலை. தமிழ் ஐ.பி.எஸ்., அதிகாரியும், கர்நாடக போலீஸ் கூடுதல் டி.ஜி.பி., முருகன் பங்கேற்கிறார்.
வரும் 22ம் தேதி மதியம் 2:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை, தமிழ் ஆர்வலர் எஸ்.எம்.பழனி தலைமையில் வெற்றி அரங்கம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு ராணுவ விஞ்ஞானி டில்லி பாபு எழுதிய, வெள்ளோட்டம் வெல்லட்டும் என்ற புத்தகத்தை, இஸ்ரோ செயற்கைகோள் மைய முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை வெளியிடுகிறார்.
வீரமுத்துவேல்
வரும் 23, 24ம் தேதிகளில் மதியம் 1:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை, பேபி ஜெயகுமார் குழுவின் மாய வித்தை கண்காட்சி. மாலை 3:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை வெற்றி அரங்கம். 24ம் தேதி மாலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை பாவரங்கம் நடக்கிறது.
வரும் 25ம் தேதி மாலை 4:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை புத்தக ஆசிரியர் குமார் எழுதிய புத்தகம் வெளியீடு. வரும் 26ம் தேதி மதியம் 2:00 மணிக்கு வெற்றி அரங்கம். மாலை 6:00 மணிக்கு சிந்தனை களம். தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், கர்நாடக விவசாய துறை செயலருமான அன்புகுமார் பங்கேற்கிறார்.
வரும் 27ம் தேதி மதியம் 2:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை, பெங்களூரு தமிழ்சங்க துணை செயலர் சு.பாரி தலைமையில், மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி. மாலை 5:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை சிந்தனை களம். மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை, கவிஞர் தமிழ் இயலன் சங்க கால குரல்கள் புத்தகம் வெளியீடு.
பரிசு தொகை
வரும் 28ம் தேதி மதியம் 3:00 மணிக்கு அறிவியல் அரங்கம். சிறப்பு விருந்தினர்களாக இஸ்ரோ விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாதுரை, வீரமுத்துவேல், ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு பங்கேற்பு. மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை சிந்தனை களம். தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனருமான வினோத் பிரியா பங்கேற்பு.
வரும் 29ம் தேதி மாலை 5:00 மணி முதல் இரவு 6:30 மணி வரை, கர்நாடக தமிழ் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி. தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், கர்நாடக மாநில மூலிகை செடிகள் ஆணைய தலைமை செயல் அதிகாரியுமான வெங்கடேசன் தலைமை தாங்குகிறார்.
கர்நாடகாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் பணியாற்றி வரும், தமிழ் செயற்பாட்டாளர் சி.ராஜனுக்கு கர்நாடக தமிழ் பெருந்தகை விருது வழங்கப்படுகிறது. தமிழ் மொழி திறன் போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு, 1.50 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. சிறந்த தமிழ் புத்தகங்களுக்கு 35,000 ரூபாய் பரிசு தொகை வழங்கப்படுகிறது.
புத்தக விழா தொடர்பான கூடுதல் தகவல்களை https://tamilbookfestival.com என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.