சத்துணவு, அங்கன்வாடி, ஓய்வூதியர்கள் மருத்துவ காப்பீடு வசதி கோரி தீர்மானம்
சத்துணவு, அங்கன்வாடி, ஓய்வூதியர்கள் மருத்துவ காப்பீடு வசதி கோரி தீர்மானம்
UPDATED : ஆக 30, 2024 12:00 AM
ADDED : ஆக 30, 2024 10:30 AM
கோவை:
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின், மூன்றாவது மாவட்ட பேரவைக்கூட்டம், தாமஸ் கிளப்பில் நடந்தது.
மாவட்ட தலைவர் வீரபத்திரன் தலைமை வகித்தார். ஐ.சி.டி.எஸ். மாவட்டதுணைத்தலைவர்கள் சாந்தாமணி மற்றும் தமிழரசி ஆகியோர் வரவேற்றனர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க, மாவட்டத் தலைவர் செந்தில்குமார் துவக்க உரை நிகழ்த்தினார்.
இக்கூட்டத்தில், குறைந்தபட்ச பென்ஷன் 6,750 ரூபாய்- அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், ஒப்புக்கொண்ட ஈமச்சடங்கு முன்பணம் மற்றும் மருத்துவ காப்பீடு உடனடியாக அறிவிக்க வேண்டும், காலை உணவு திட்டத்தை, சத்துணவு ஊழியருக்கும் வழங்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு, பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பலராமன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் பிரகலதா, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் ரீட்டா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.