மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் அடுத்த தலைமுறை ஏவு ராக்கெட்
மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் அடுத்த தலைமுறை ஏவு ராக்கெட்
UPDATED : அக் 17, 2024 12:00 AM
ADDED : அக் 17, 2024 06:09 PM

மதுரை:
அடுத்த தலைமுறைக்கான ஏவு ராக்கெட் (என்.ஜி.எல்.வி. - நெக்ஸ்ட் ஜெனரேஷன் லாஞ்ச் வெகிக்கிள்) தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அதற்கான பணியை இஸ்ரோ தொடங்கியுள்ளது.
அடுத்த 7 ஆண்டுகளில் விண்ணில் பாயும் வகையில் செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 15 முறை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் இந்த ஏவு ராக்கெட் தயாரிக்கப்படுகிறது என இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின்(இஸ்ரோ) கீழ் செயல்படும் திருவனந்தபுரம் வலியமலாவில் உள்ள திரவ உந்துசக்தி அமைப்பு மைய (எல்.பி.எஸ்.சி.,) இயக்குநர் நாராயணன் கூறினார்.
நமது நிருபருக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சில திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பாக சந்திரயான் 4 திட்டம். நிலவில் இறங்கி அங்கு மணல் எடுத்து மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்யும் முயற்சி. சந்திரயான் 3 செயற்கைகோள் எடை 3900 கிலோகிராம். சந்திரயான் 4 எடை 9800 கி.கி. அடுத்தகட்டமாக வீனஸ்(வெள்ளி) கோளிற்கு செயற்கைக்கோளை ஏவுவது. அது வித்தியாசமான கோளாகும். அங்கு வெப்பநிலை 420 டிகிரி செல்ஷியஸிற்கு மேலாக இருக்கும்.
மத்திய அரசு வழிகாட்டுதல்படி புதிய திட்டங்களுக்காக நிறைய முயற்சிகளை செய்து வருகிறோம். குறிப்பாக என்.ஜி.எல்.வி.,க்கு திரவ ஆக்சிஜன், மீத்தேனை வைத்து பயன்படுத்தக்கூடிய 110 டன் உந்துசக்தி தரக்கூடிய இன்ஜினை வடிவமைத்து வருகிறோம். இந்த ஏவு ராக்கெட்டை எல்.பி.எஸ்.சி., விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், மகேந்திரகிரி ஐ.பி.ஆர்.சி., ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையம் இணைந்து தயாரிக்க தொடங்கியுள்ளோம்.
முதன்முதலாக 1980 ல் எஸ்.எல்.வி., (செயற்கைக்கோளை செலுத்தும் வாகனம்) வெற்றி அடைந்தபோது, ராக்கெட் கொண்டுபோன செயற்கைக்கோளின் எடை 34 கிலோ கிராம். என்.ஜி.எல்.வி., 30 ஆயிரம் எடை கொண்ட செயற்கைக்கோளை 400 கி.மீ., சுற்றளவில் அனுப்பக்கூடிய சக்தி வாய்ந்தது. மார்க் 3 ராக்கெட் 43 மீட்டர் உயரமுள்ளது. இது 93 மீட்டர் உயரமுள்ளது. மார்க் 3 கிட்டத்தட்ட 640 டன் எடையுள்ள ராக்கெட். என்.ஜி.எல்.வி., 1100 டன். மார்க் 3 ராக்கெட் 8 ஆயிரம் கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை அனுப்பக்கூடியது. அதைவிட 4 மடங்கு சக்திவாய்ந்தது என்.ஜி.எல்.வி., ராக்கெட்.
என்.ஜி.எல்.வி., சிறப்பு
இந்த ராக்கெட்டின் முதல்நிலை திரவ ஆக்சிஜன், மீத்தேனில் இயங்கக்கூடியது. 110 டன் உந்து சக்தி திறன் கொண்ட 9 இயந்திரங்களை பயன்படுத்தி இயங்கக்கூடியது. 2வது நிலை 120 டன் உந்துசக்தி, திரவ ஆக்சிஜன், மீத்தேனுடன் 2 இன்ஜின்களை வைத்து இயங்கும். 3வது நிலை புதிதாக உருவாக்கப்பட்ட சி 32 கிரையோஜெனிக் இன்ஜினால் (திரவ ஆக்ஸிஜன், திரவ ஹைட்ரஜன்) இயங்க செய்வது.
இதில் எரிபொருள் கொண்ட 2 உறுப்பு கலன்கள் உண்டு. ஒவ்வொன்றிலும் 160 டன் திட நிலை எரிபொருள் கொண்ட சாலிடு மோட்டாரை பயன்படுத்த உள்ளோம். இந்த சக்திவாய்ந்த ராக்கெட்டை மீண்டும் மீண்டும் 15 முறை பயன்படுத்தும் வகையில் தயாரிக்க உள்ளோம். இதன்மூலம் அதிக எடையுள்ள செயற்கைக்கோள்களை அனுப்ப முடியும். மனிதர்களை அனுப்ப முடியும். 2035ல் இந்தியா உருவாக்க உள்ள விண்வெளி ஆய்வு மையத்திற்கும் செல்ல முடியும். இவ்வாறு கூறினார்.