UPDATED : ஜூன் 06, 2025 12:00 AM
ADDED : ஜூன் 06, 2025 10:25 AM
 ஊட்டி: 
ஊட்டி கீழூர் கோக்கலாடா அரசு பள்ளியில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க செய்ய ஏதுவாக, மாணவர் பெயரில் 5,000 ரூபாய் வைப்பு தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி கீழூர் கோக்கலாடா அரசு பள்ளியில், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளி மூடப்பட்டது. இதனால், சுற்றுவட்டார மக்கள் குழந்தைகளை அதிக தொகை செலவழித்து, அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்தனர். இதனால், பொருளாதார இழப்பு அதிகரித்தது. இதனை தவிர்க்க, பள்ளி பி.டி.ஏ., மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் ஒருங்கிணைந்து, பள்ளியில் புதிதாக சேரும் மாணவர்கள் பெயரில், 5,000 ரூபாய் வைப்பு தொகை வழங்க முடிவெடுத்தனர்.
நடப்பாண்டு, பள்ளி திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மாணவர்கள் அருகில் உள்ள தபால் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, கணக்கு தொடங்கி அவர்களது பெயரில், 5,000 ரூபாய் வைப்பு தொகை வழங்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா கூறுகையில், இப்பள்ளியில் பயிலும், 27 மாணவர்கள் விளையாட்டு உட்பட, பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்குகின்றனர். மூன்று அரசு ஆசிரியர்களுடன், பள்ளி மேலாண்மை குழு சார்பிலும், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளியில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1 முதல், 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தலா, 6,000 ரூபாய், 6ம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு 5,000 ரூபாய், 7ம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு, 4,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு முடித்து செல்லும் மாணவர்களுக்கு, வட்டியுடன், முழு தொகை வழங்கப்படும். இது, மாணவர்களின் உயர் கல்விக்கு உதவும். ஏழை மாணவர்கள் அதிக அளவில் பள்ளியில் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

