UPDATED : மே 25, 2024 12:00 AM
ADDED : மே 25, 2024 11:40 AM
சென்னை:
தனியார் பள்ளிகளில், ஆர்.டி.இ., திட்டத்தில் இலவச கல்விக்கு விண்ணப்பித்த மாணவர்களின் சேர்க்கைக்கு, வரும் 28ம் தேதி குலுக்கல் நடக்கிறது.
ஆர்.டி.இ., திட்டத்தில் இலவச, கட்டாய கல்வி சட்டப்படி, தனியார் சுயநிதி பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினருக்கான, 25 சதவீத இட ஒதுக்கீடில், ஏப்., 24 முதல் கடந்த 20ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
சென்னை மாவட்டத்தில், 636 பள்ளிகளில் பெறப்பட்ட 10,342 விண்ணப்பங்களில், 9,051 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதில், சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்களில், எண்ணிக்கையின் அடிப்படையில், பெற்றோர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் சேர்க்கை நடக்கும்.
அதன்படி, விண்ணப்பங்கள் கூடுதலாக உள்ள பள்ளிகளில், வரும் 28ம் தேதி குலுக்கள் நடைபெறும். அன்றைய நாட்களில், இணைய வழியில் பதிவேற்றம் செய்த பெற்றோர்கள், விண்ணப்பித்த பள்ளியில் குலுக்கலில் பங்கேற்கலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.