விற்றது சமோசா; படிப்பில் சமர்த்தா: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்திய மாணவன்
விற்றது சமோசா; படிப்பில் சமர்த்தா: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்திய மாணவன்
UPDATED : ஆக 31, 2024 12:00 AM
ADDED : ஆக 31, 2024 03:26 PM
நொய்டா:
உ.பி.,யை சேர்ந்த 18 வயது மாணவன், சாலை ஓரத்தில் சமோசா விற்று வந்ததுடன், கடினமாக படித்து நீட் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளான்.
மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இத்தேர்வுக்காக லட்சக்கணக்கான மாணவர்கள் அல்லும் பகலும் கடினமாக படித்து வருகின்றனர். பலருக்கு எட்டாக்கனியாக இருக்கும் நீட் தேர்ச்சி, சாலை ஓரத்தில் சமோசா விற்கும் 18 வயது சிறுவனுக்கு கிடைத்திருக்கிறது.
உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் வசிக்கும் சன்னி குமார் என்ற 18 வயது மாணவன், காலையில் பள்ளி சென்றுவிட்டு மாலை 4 மணி முதல் 9 மணி வரை சாலை ஓரத்தில் சமோசா, பிரெட் பக்கோடா போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றான். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணியில் இருந்துகொண்டே நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீட் தேர்வுக்காக படித்து வந்துள்ளான். கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வு எழுதி, 720க்கு 664 மதிப்பெண் பெற்று தேர்ச்சியும் பெற்றுள்ளான். இது பற்றி தெரிந்த இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிடும் நபர் ஒருவர், சன்னி குமார் தேர்ச்சி பெற்றதை பகிர்ந்துள்ளார்.
அதன்மூலமே இவரது புகழ் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது பற்றி சன்னி குமார் கூறுகையில், எனது தந்தையிடம் இருந்து பொருளாதார ரீதியாக எந்த உதவியும் கிடைக்கவில்லை. குடும்பத்தை காப்பாற்றுவதற்காக சாலை ஓரத்தில் கடை வைத்து சமோசா, பிரெட் பக்கோடா விற்று வந்தேன். என் அம்மாதான் நன்றாக படித்து, வாழ்க்கையில் வேறு ஏதேனும் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும் எனக் கூறி முழு ஆதரவளித்தார். தற்போது இங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறேன், என்றார். சன்னி குமாருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.