பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: வீண் பதற்றம்-பரபரப்பு
பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: வீண் பதற்றம்-பரபரப்பு
UPDATED : செப் 03, 2024 12:00 AM
ADDED : செப் 03, 2024 10:17 AM
ஈரோடு:
ஈரோட்டில் பூந்துறை சாலை செட்டிபாளையத்தில், ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை, 2,500 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
நேற்று காலை, 9:00 மணியளவில் அலுவலக மெயிலை, ஊழியர்கள் கணினியில் சரி பார்த்தனர். அப்போது கடந்த, 30ல் வந்த ஒரு மெயிலில், பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் கல்வித்துறை, தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பள்ளிக்கு வெளியே திறந்தவெளி மைதானத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பள்ளிக்கு விடுமுறை அளித்து, மாணவர்களை வீட்டுக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தினர். பள்ளியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கடந்த, 29ம் தேதி சேனாதிபதிபாளையம் தி இண்டியன் பப்ளிக் பள்ளிக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. சோதனைக்கு பின் புரளி என தெரிந்தது. இந்நிலையில் மற்றொரு பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெடிகுண்டு கண்டறியும் பயிற்சி பெற்ற மோப்ப நாய்க்கு, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதேபோல் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு பிரிவு போலீசார், ஒரு குழுவாக இல்லாமல், மாவட்டம் முழுவதும் பிரிந்து கிடக்கின்றனர். இதனால் வெடிகுண்டு மிரட்டல் சோதனைக்கு வர தாமதம் ஏற்படுகிறது. நேற்றும் வெகு நேரத்துக்குப் பிறகே ஒருவர் பின் ஒருவராக வந்து சேர்ந்தனர்.