புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு நேரம் மீண்டும் மாற்றம்: கல்வித் துறை அறிவிப்பு
புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு நேரம் மீண்டும் மாற்றம்: கல்வித் துறை அறிவிப்பு
UPDATED : ஆக 05, 2024 12:00 AM
ADDED : ஆக 05, 2024 09:52 AM

புதுச்சேரி:
புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு நேரம் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. காலை 9:15 மணிக்கு துவங்கி, மாலை 4.20 மணி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நகர பள்ளிகள் காலை 8:45 மணிக்கு துவங்கி, மாலை 3:20 மணியளவிலும், கிராமப்புற பள்ளிகள் காலை 9:30 மணிக்கு துவங்கி மாலை 4:15 வரையிலும் நடத்தப்பட்டு வந்தது.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின்படி, அரசு பள்ளிகளில் தினசரி பாடவேளை 7ல் இருந்து 8 ஆக உயர்த்தது. இதன் காரணமாக, கடந்த 15ம் தேதி முதல் புதுச்சேரியில் பள்ளிகள் இயங்கும் நேரம் மாற்றப்பட்டது.
அதன்படி, அனைத்து பள்ளிகளும் தினமும் காலை 9:00 மணிக்கு காலை வழிபாடுடன் பள்ளிகள் துவங்கி, மாலை 4:20 மணி வரை 8 பாட வகுப்புகள் நடந்து வந்தது. இதற்கிடையே ஆசிரியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் பள்ளிகள் இயங்கும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கல்வித்துறையில் முறையிட்டனர்.
பள்ளிகள் இயங்கும் நேரம் கல்வித்துறை செயலரின் ஒப்புதலோடு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட நேர அட்டவணைப்படி வருகிற 7ம் தேதி முதல் பள்ளிகள் இயங்குமாறு அனைத்து பள்ளி தலைவர்களும் அறிவுறுத்தப்படுகிறது.
புதிய நேர அட்டவணை
இந்த புதிய நேர அட்டவணை வருமாறு: காலை 9:15 மணி முதல் 9:30 மணி வரை 15 நிமிடங்கள் காலை வழிபாடும். காலை 9:30 மணி முதல் 12:40 மணி வரை நான்கு பாடவேளையும், காலை 11:00 மணி முதல் 11:10 வரை சிறிய இடைவேளை (முதல் இண்டர்வெல்) விடப்படும்.
4 பாட வேளைகள்
மதியம் 12:40 மணி முதல் 1:30 மணி வரை உணவு இடைவேளை, மதியம் 1:30 மணி முதல் மாலை 4.20 மணி வரை 4 பாடவேளையும், மதியம் 2:50 மணி முதல் 3 மணி வரை சிறிய இடைவேளை (2-வது இண்டர்வெல்) விடப்படும்.
இதில் காலையில் உள்ள 3 பாடவேளைகள் தலா 45 நிமிடங்களும், மதியத்திற்கு பிறகு நடைபெறும் 4 பாடவேளைகள் என தலா 40 நிமிடங்கள் கொண்டதாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
என்ன மாற்றம்
ஏற்கனவே அறிவித்த பள்ளி நேர அட்டவணையில் உணவு இடைவெளை மதியம் 12:25 முதல் மதியம் 1:30 வரை என, 1:00 மணி நேரம் 5 நிமிடம் விடப்பட்டது. இதில் 15 நிமிடங்கள் குறைக்கப்பட்டு, ஏற்கனவே காலை 9:00 மணிக்கு பள்ளி துவங்கப்பட்ட நிலையில், காலை 9:15 மணிக்கு துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.